ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்பார்கள். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தர வல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபருக்கு எந்த ஒரு கடின நிலையில் குருவின் அற்புத பலனால் நிலையான பலன்களைத் தான் பெறுவார்கள் என்பது ஜாதகப்படியான விதி. சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது குரு பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம். அந்த குரு பலம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
குரு பலன் என்றால் என்ன? ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களை தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும். இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதன்படி கோச்சார குரு, ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார குரு பலம் வாய்ந்தவராக இருப்பார். இதையே குரு பலம் என குறிப்பிடுகிறார்கள்.
குரு பார்வை: ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சி களால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
குரு பகவான் எப்போது வந்தால் என்ன பலன் கிடைக்கும்: குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.
திருமணம் செய்ய ஒருவருக்கு குரு பலன் எப்போது வரும்?: குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடுதல், புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பார்கள். அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி உடனே திருமணத்தை நடத்தி தருவார். ஜாதகத்தின் விதியையும் மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது. எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என நன்கு அறிந்த பின் திருமண முயற்சிகளில் ஈருபடுவார்கள். குருவின் பார்வை களஸ்திர ஸ்தானத்தில் வரும்போது திருமண வயதில் உள்ளவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் நிச்சயம் திருமணம் கைகூடிவரும். அதுபோல குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தில் இருந்தால். அந்த ஜாதகருக்கு அந்த குருபெயர்ச்சி காலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும்.
குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?: குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும். 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும். 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும். 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும். 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும். 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும். 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார். 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும். 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டு. 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.