சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22 - சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த வார்த்தையை போல குரு பகவான் தன் பார்வைபலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார்.
துலாம் : நவக்கிரகங்களில் சுபகிரகமாக கருதப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு, இப்பொழுது 7 ஆம் இடத்திற்கு வருவதால் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் அநீங்கும். உங்களின் பணத்தேவை நிவர்த்தியாகும். திருமணப் பேச்சுக்கள் முடிவாகும். செல்வாக்கு மிக்கவர்களின் பழக்கத்தால் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். எண்ணற்ற நற்பலன்கள் உங்களின் இல்லம் தேடி வரும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் வருமானம் தொழிலில் கிடைக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் நட்பாக மாறுவர்.
விருச்சிகம் : நவக்கிரகங்களில் சுப கிரக மாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சமாதி பதியாகவும், பூர்வ, தன- புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 6 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் எதிரிகளின் தொல்லை குறையும். எனவே, இதுவரை இருந்த இடையூறு சக்திகள் எல்லாம் அகன்று ஓடும். கடன் சுமை குறையும். காரிய வெற்றிக்கு உங்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கலாம்.
தனுசு : நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிநாதனாகவும், சுகாதிபதியாகவும் இருக்கிறார். அவர் 5 ஆம் இடத்தில் இருந்து கொண்டு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பது யோகத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் வரும்பொழுது பூர்வ புண்ணியத்தின் பலனாக கிடைக்க வேண்டிய தெல்லாம் கிடைக்கும்.
கும்பம் : நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது மூன்றாம் இடத்தில் அடியெடுத்துவைக்கின்றார். மூன்றாமிடம் என்பது சகோதர சகாய ஸ்தானம் மற்றும் வெற்றிகள் ஸ்தானமாகும். மூன்றில் உள்ள ராகுவோடு குரு இணைவதால் ராகு- கேதுபெயர்ச்சிக்குப்பின்னால் தான் குரு பலம் பெற்று நன்மைகளைச் செய்வார்.
மீனம் : நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிநாதனாகவும், 10 ஆம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர். அவர் 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். நல்ல வரன்கள் வாசல்தேடி வரும். உத்தியோகம், தொழிலில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.