முதல் கதை மகாரிஷி வேத விநாயகரை மஹாபாரதக்கதையை எழுதக்கோரினார்கள் தேவர்கள், மிகவும் பண்டிதரான ஒருவர், தான் சொல்வதைக்கேட்டு புரிந்துக் கொண்டு பிழையின்றி எழுத வேண்டும் என்று நினைத்தார் வியாசர். அதற்காக சிவ பெருமானை வேண்டி விநாயகரை எழுதிக்கொடுக்க கேட்குமாறு கூறினார் பிரம்மா. விநாயகர் அறிவுக்கூர்மைக்கு முதன்மையானவர் என்பதால் வியாசரும் விநாயகரிடம் உதவி கேட்டார். வியாசரின் வேண்டுகோளுக்கு ஒத்துக்கொண்ட விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தார். வியாசர் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து முழு கதையையும் கூற வேண்டும் என்றும், அப்படி சொல்வதை நிறுத்திவிட்டால் தானும் எழுதுவதை நிறுத்திவிட நேரிடும் என்றும், அப்படியே தான் ஒரு வேளை எழுதுவதை நிறுத்தி விட்டால், பிறகு வியாசர் எழுத வேரொருவரைத்தான் தேட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிபந்தனைக்கு சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தார் வியாசர்.
சரளமாக வியாசர் தான் ஒத்துக்கொண்டபடி நிறுத்தாமல் மஹாபாரதக்கதையின் பாக்களை சொல்லச்சொல்ல விநாயகரும் தொடர்ந்து வேகமாக எழுதினார், எழுதுவதற்கு முன்பு வியாசர் விநாயகரிடம் தான் கூறும் ஒவ்வொரு பாடலையும் அதன் முழுப்பொருளை புரிந்துக்கொண்ட பின்பே எழுதவேண்டும் என்று கூறினார். விநாயகரும் அதற்கு ஒப்புக்கொண்டார் வியாசர் கூறி முடிக்கும் முன்பாகவே விநாயகர் அதன் பொருள் புரிந்து வேகமாக எழுதிக் கொண்டிருந்தார், அப்படி எழுதும் போது அவருடைய எழுத்தானி உடைந்துவிட்டது. வேறு எழுத்தாணி தேட அவகாசம் இன்றியும், தான் போட்ட நிபந்தனையை தானே மீறக்கூடாது என்று நினைத்த விநாயகர் தன் இடது தந்தத்தை உடைத்து அதனைக்கொண்டு எழதி முடித்தார் விநாயகர். இதனாலேயே விநாயகருக்கு ஏகதந்தா (ஓர் தந்தம்) என்ற பெயர் வழங்கப்பட்டது.
இரண்டாம் கதை பத்ம புராணத்தின்படி, சிவபெருமானைக் காண, அவரது சிஷ்யரான பரசுராமர் கைலாயம் சென்றாராம். அப்போது சிவபெருமான் தவத்தில் இருந்ததால், பரசுராமரை விநாயகப் பெருமான் தடுக்க, அவர் தனது கோடாரியால் விநாயகரைத் தாக்கி விட்டார். அந்தக் கோடரி சிவபெருமானால் பரசுராமருக்கு வழங்கப்பட்டது. அதை அறிந்த விநாயகர், பரசுராமரைத் தடுத்ததால், கோடாரி வீச்சில் ஒரு தந்தம் உடைந்து விட்டது. அன்றிலிருந்து விநாயகர் ஏகதந்தா என்று அழைக்கப்படுகிறார். பின்னர் பரசுராமர் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மூன்றாம் கதை ஒரு விருந்தில், விநாயகப் பெருமான் லட்டுகளையும், கொழுக்கட்டைகளையும் அதிகமாக உண்டு விட்டு, க்ரௌஞ்சா என்ற அவரது சுண்டெலியின் மீது ஏறி வர, வழியில் ஒரு பாம்பினைக் கண்ட சுண்டெலி, பயத்தினால் விநாயகரை அப்படியே கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது. இதனால் அவரது வயிறு வெடித்து, உண்ட லட்டுகளும், கொழுக்கட்டைகளும் வெளியே சிதறின.
பாம்பினைப் பிடித்து தன வயிற்றை இறுகக் கட்டினாராம் விநாயகர். இதைக் கண்ட சந்திரக் கடவுள் சிரிக்க, கோபம் வந்த விநாயகப் பெருமான், தனது தந்தத்தினை உடைத்து சந்திரன் மீது எறிந்து " இனி நீ முழு ஒளியுடன் எப்போதும் ஜொலிக்க முடியாது" என்று சாபமளித்தார். எனவே தான் அவருக்கு ஒரு தந்தம் உடைந்திருக்கிறது . இதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது மக்கள் நிலவைப் பார்ப்பதை தவிர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது தவிர்த்து சில அறிவுப் பூர்வமான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் உருவம் தான் விநாயகர் என்றும் அவரின் இரண்டு தந்தங்களுள் ஒன்று உணர்ச்சி மற்றொன்று ஞானம் என்றும், ஞானம் முழுமையாய் இருக்கும்போது உணர்வின்நிலை குறைவாகவே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக விநாயகர் உருவம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுண்டு. காரணம் எதுவானாலும் சரி, முழு முதற்கடவுளாக விநாயகர் திகழ்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.