வசதி, ஆடம்பரம், இல்லற சுகம் உள்ளிட்ட விஷயங்களைத் தரக்கூடிய சுக்கிரன், மே 2 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று பகல் 1.49 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மே 30 ஆம் தேதி வரை மிதுனத்திலேயே இருப்பார். சுக்கிர பார்வை, கிரக கூட்டணிகளின் அடிப்படையில் சில ராசியினருக்கு பொருளாதாரம், வருமானத்தில் முன்னேற்றமும், செயலில் வெற்றி மேல் வெற்றியைத் தரக்கூடியவராக இருப்பார். அந்தவகையில், மிதுன ராசியில் சஞ்சரிக்கும் போது அங்கு சுக்ர யோகம் உருவாகிறது. இதனால் சில ராசியினருக்கு ராஜ யோகம் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம் : மேஷ ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல வகையில் நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் வாழ்க்கை வேடிக்கையாகவும், நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும். மே மாதத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்கப் பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல், உடன்பிறந்தவர்களின் உதவியோடு அதை சேமிக்கவும், பணத்தைச் செலவு செய்யவும் வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக சாதகமான நேரமாக இருக்கும்.
மிதுனம் : உங்கள் ராசிநாதனின் நண்பரான சுக்கிரன் பெயர்ச்சி ஆவது மிகவும் சிறப்பாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சொத்து வாங்கும் விஷயத்தில் இந்த காலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு பணம் சேரும்.அதை ஆனந்தமாக செலவிடவும் வாய்ப்புள்ளது.
சிம்மம் : சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். பணியிடத்தில் கூட உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த நேரம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
துலாம் : துலாம் ராசிநாதனான சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், உங்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மே மாத்தில் சுக்கிரனின் அமைப்பால் உங்கள் மூதாதையர் சொத்து உங்களுக்கு கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். அதன் மூலம் அனுகூலமான பலன்கள் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.
மீனம் : மிதுன ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் மீன ராசிக்காரர்கள் புதிய வாகனம், சொத்து முதலியவற்றை வாங்க நிலைமை சாதகமாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான ஒரு பெரிய பொருள் வாங்க வாய்ப்புள்ளது. உங்களின் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். வியாபாரிகளுக்குச் சாதகமான காலம் என்பதால் நல்ல லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவும், உதவியும் செய்வார்கள்.