இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.
அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் அமைந்துள்ள பகுதி பூக்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, அங்கு மீனாட்சி அம்மனை இருத்தி வேப்பம் பூ மாலை சூட்டி, ரத்தின ஆபரணங்கள் கொண்ட ராயர் கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் செய்து ரத்தின ஆபரணங்கள் இழைத்த செங்கோல் வழங்கப்பட்டது. அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பித்தார்.
மீனாட்சி பட்டாபிஷேகம் குறித்து பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடுகையில், "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. மேலும், பாண்டியர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார்.