அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது.
சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது. அமர்நாத் பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நிறைய நிறுத்தங்கள் உள்ளன. அழிவே இல்லாத சிவபெருமானின் ரகசியங்களை பார்வதி தன்னிடம் கூற வேண்டி வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க சிவபெருமான் முடிவெடுத்தார்.