அட்சய திரிதியை 2023 : 2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 வரை சொல்லப்படுகிறது.
அட்சய திரிதியை வழிபாட்டு முறை : அட்சய திரிதியை நாளில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, நீராடி, விளக்கேற்றி வாசனை மலர்களை கொண்டு அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட செல்வ வளம் பெருகும். துளசி இலைகளை கண்டிப்பாக படைத்து வழிபட வேண்டும். இதனால் அள்ள அள்ள குறையாத செல்வம் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமிக்கு பிரியமான பால் பாயாசம், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
தானம் செய்ய வேண்டிய பொருள் : அட்சய திரிதியை என்பது தானம் செய்வதற்கான நாளாகும். ஆனால் இன்று அது தங்கம் வாங்கி சேர்ப்பதற்கான நாளாக மாறி விட்டது. அட்சய திரிதியை நாளில் மங்கல பொருட்களை வாங்கி யாருக்காவது தானம் கொடுத்தால் மகாலட்சுமியின் அருளால் நமக்கு அனைத்து விதமான செல்வங்களும் பல மடங்காக திரும்ப கிடைக்கும் என்பது பொருள்.
தானம் தர வேண்டிய நாள் : அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட இந்த நாளில் தானம் செய்யலாம்.
தங்கம் வாங்க நல்ல நேரம் : வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை குரு ஓரை நேரமான காலை 7 மணி முதல் 8 வரை தங்கம், வெள்ளி வாங்கலாம். பின்னர், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை வாங்கலாம். சுக்கிர ஓரை காலமான காலை 10 மணி முதல் 11 மணி மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம் வாங்கலாம். ஒருவேளை தங்கம் வாங்க முடியாதவர்கள், அன்றைய தினம் பச்சரிசி, கல் உப்பு, மஞ்சள், போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.