இந்தியாவில் பிரபலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று அட்சய திருதியை திருநாள். இந்த நாள் மங்களகரமான நாளாகவும், மங்கல பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது. தங்கம் மகாலட்சுமியின் அடையாளமாக பார்க்கப்படுவதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். சமஸ்கிருதத்தில் அக்ஷயா என்றால் 'அள்ள அள்ள குறையாதது' மற்றும் திருதியை என்றால் 'மூன்றாவது' என்று அர்த்தம். அதாவது, அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். எனவே, இந்த நாளில் வாங்கும் எந்தவொரு பொருளும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பிக்கை.
அள்ளித் தரும் அட்சய திருதியை : அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் வளம் பெரும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் கிடைத்து தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வசதி இல்லாதவர்கள் மகாலட்சுமி வசிக்கும் உப்பு, மல்லிகை போன்ற வெள்ளை நிறத்தால் ஆன மங்கல பொருட்களை வாங்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அட்சய திரிதியை 2023 தேதி : 2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 வரை சொல்லப்படுகிறது.
அட்சய திரிதியை வழிபாடு : அட்சய திரிதியை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். வாசனை மலர்களை கொண்டு மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மகாலட்சுமியையும், பெருமாளை வழிபட செல்வ வளம் பெருகும். வழிபாட்டில் துளசி இலைகளை கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால், அள்ள அள்ள குறையாத செல்வம் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமிக்கு பிரியமான பால் பாயாசம், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். முடியாதவர்கள், சர்க்கரை வைத்து பூஜை செய்யலாம்.
தங்கம் வாங்க முடியாதவர்கள் வேறு என்ன வாங்கலாம்? : அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அனைவராலும் தங்கள் வாங்க முடியாது என்பது நிஜம். இந்நிலையில், இந்த நன்னாளில் தங்கம் தவிர, வளத்தின் அடையாளமா ன பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு மாறாக வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.