

வெயில் காலம் வந்துவிட்டால் உணவு முறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் உடலில் நீரேற்றம் அதிகரித்து வெயிலை எதிர்கொள்ள தெம்பு வரும். நீர் நிறைந்த உணவுகளை உண்பதால் உடலின் நீரேற்றம் அதிகரிக்கும். வெயிலை சமாளிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.


தக்காளி : தக்காளி வைட்டமின் C மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டை உள்ளடக்கியது. லக்கோபின் போன்ற ஃபைட்டோகெமிக்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. இது தொற்று நோய், நாள்பட்ட வியாதிகளையும் குணப்படுத்தும்.


வெள்ளரிக்காய் : அதிக நார்ச் சத்து நிறைந்த காய். கோடைக்கு மிகவும் உகந்த வெள்ளரியை சாலட் செய்து சாப்பிடலாம். தயிரில் கலந்தும் சாப்பிடலாம். நீரேற்றம் அதிகரிக்கும்.


தர்பூசணி : நீரேற்றத்தின் நாயகன் என அழைக்கப்படும் தர்பூசணியை தினமும் ஜுஸாக அருந்தலாம். நீங்கள் கடுமையாக சூரிய வெப்பத்தால் வாடியிருந்தாலும் தர்பூசணியை உண்டால் போதும் குளிர்ச்சியாக்கிவிடும். அதேபோல் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் லைக்கோபின் ( lycopene ) என்னும் சத்து தர்பூசணியில் உள்ளது.


ஆரஞ்சு :சிட்ரஸ் நிறைந்த பழமான ஆரஞ்சில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ஆரஞ்சில் 80% நீர் நிறைந்துள்ளது. அதனால் வெயில் நாட்களில் ஆரஞ்சை உட்கொள்வதால் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும்.


தயிர் : புரோட்டீன்களை உள்ளடக்கிய தயிர் வெயில் நாட்களில் தவிர்க்க முடியாத உணவு. அதேபோல் அதிக உணவு உண்ண விரும்பாதவர்கள் தயிரை உண்டால் உடனே வயிறு நிறைந்து உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும். தயிரில் இருக்கும், ப்ரொபியோடிக்ஸ் (probiotics ) ஜீரண சக்தியை சீராக்கும்.


கோஸ் : உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் கோஸ் வெயில் காலத்திற்கும் ஏற்றது. உடலில் உள்ள தேவையில்லாத நீரையும் வற்றவைத்துவிடும். அதேசமயம், நீரேற்றத்தை அதிகரிக்கச் செய்யும். இது சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்துவிடும்.


ஆப்பிள் மற்றும் பேரிக்காய் : ஃபைபர் அதிகம் கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் பேரிக்காய். இது சரும வறட்சியையும் நீக்கக் கூடியது.


க்ரீன் டீ : நீங்கள் உடல் நீரேற்றத்திற்காக அதிக நீர் அருந்துகிறீர்கள் என்றால் க்ரீன் டீயையும் அருந்துங்கள். இது நீருக்கு சிறந்த மாற்று. இது நீரைக் காட்டிலும் அதிக நீரேற்றத்தை அளிக்கக் கூடியது.


திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி : இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் தவிர்க்க உதவும்.