உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 40 சதவீதம் வரையில் டிஸ்கவுண்ட் வழங்கவும், பின்னர் அந்தத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும் இந்தக் கொள்கை வழி செய்கிறது. எனினும், உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக எவ்வளவு தொகை மானியமாக பெறப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எவ்வளவு இலக்கு : இந்தியாவில் ஒரு மில்லியன் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 7 ஆயிரம் எலெக்ட்ரிக் பேருந்துகளை தயாரிக்கும் நோக்கத்தில் FAME-2 கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் 40 சதவீதம் வரையில் மானியம் பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.ஆட்டோ மொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாக பொருட்களுக்கான பி.எல்.ஐ. கொள்கை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாக உற்பத்தி துறையில் ரூ.74,850 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
FAME இந்தியா கொள்கை என்றால் என்ன ? : எலெக்ட்ரிக் போக்குவரத்தை ஊக்குவிக்கும் தேசிய இலக்கின் கீழ் இந்தத் திட்டமானது கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் புதைவடிவ எரிபொருள் (பெட்ரோல், டீசல்) தேவையை குறைத்து, மாசற்ற எரிபொருள் சக்திகளான எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது இதன் நோக்கம் ஆகும். காற்று மாசுபாட்டை குறைப்பது, பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்வது ஆகியவை இதன் நோக்கம் ஆகும். மாசற்ற பசுமை போக்குவரத்து வாகனங்கள் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதை இந்தக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது.