மதுரை-ராமேஸ்வரம் ரயில்வே பாதையில், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவை ரயில் மூலம் இணைப்பதற்கு பாம்பன் பாலம் கடலின் நடுவே, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இரும்பு பொட்களால் உருவான இந்த பாலம், நூற்றாண்டை கடந்தும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. எனினும், உப்புத்தன்மையுடன் கூடிய கடல்காற்று, புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பாலத்தின் அதிர்வுகளை கண்டறியும் கருவியை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த கருவியில், கடந்த மாதம் 22ஆம் தேதி அளவுக்கதிகமான அதிர்வுகள் பதிவானதால் டிசம்பர் 23ஆம் தேதி முதல் பாம்பன் ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த தடை வருகிற 10ஆம் தேதிவரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 ரயில்கள் மட்டும் அந்த பாலத்தை கடந்து சென்றன. பின்னர், அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டபோது, நாள் ஒன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது வடமாநிலத்தவர்களின் வருகை மற்றம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் தொழில்நுட்ப அறிவுரை மற்றும் ஆலோசனை குழுவான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் (RDSO) நேரடி மேற்பார்வையில் பாலத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, பாதுகாப்பாக ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே ராமேஸ்வரம் வரை ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.