ராமநாதபுரம் மாவட்டம் புண்ணியதலமாக போற்றப்படும் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். இங்கே மூலவர் மங்களநாதர் என்று அழைக்கப்படுகிறார். இவர் மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களேஸ்வரி, மங்களாம்பிகை என்றும் சுந்தரநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்.
இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு சிவபெருமானின் அருளை பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள பஞ்சலோக நடராஜர் வேறுபட்ட தனித்துவத்துடன் காட்சியளிக்கிறார். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக திகழ்கிறார்.
இந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பது மக்களின் நம்பிகை. அந்த வகையில், ‘வலை வீசி மீன் பிடித்த படலம்' இந்தத் தலத்தில்தான் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த உத்தரகோசமங்கை தலத்தில் சுவாமியை அம்பாள் நாள்தோறும் பூஜை செய்வதாக ஐதீகம் நிலவுகிறது. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்து பின்னர், சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இந்த தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடங்கியதில் இருந்து நாள்தோறும் சிவபெருமானும்-அம்பாளும் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தின்போது இங்குள்ள மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.