புதுச்சேரியில் ஓர் அலையாத்தி காடு: அலையாத்தி காடுகள் என்றால், உடனே நம் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகே இருக்கும் பிச்சாவரம்தான். ஆனால், புதுச்சேரியிலும் மாங்குரோவ் காடுகளுக்கு இடையே படகு சவாரி செய்து, திரில்லான எப்போதும் நினைவில் பசுமையாய் தங்கும் பயணத்தை மேற்கொள்ளலாம்.
முருங்கப்பாக்கம் பகுதியில் மங்குரோவ் காடுகளில் படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். இங்கே ஒரு படகில் ஆறு பேர்வரையில் பயணம் செய்வதற்கு 900 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 2 மணி நேரம் கொண்ட இந்த பயணத்தின்போது கடல் பறவைகள், அரிக்கமேடு துறைமுகம், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை பார்த்து புதிய உணர்வை அடையலாம்.
ஆரண்யா வனம்: புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் பூத்துறை கிராமத்தில் அமைந்துள்ளளது ஆரண்யா வனம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான மரங்களுடன் அடர்ந்து விளங்கும் இந்தக் காடு, ஒரு தனி மனிரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. வெறும் செம்மண் மேடாக 30 வருடத்துக்கு முன்னர் இருந்த இந்த இடம் தற்போது சந்தன மரம், செம்மரம் போன்ற 1,000க்கும் மேற்பட்ட பல்வகை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கே அழிந்துவரும் அரிய மரங்களையும் பார்க்க முடியும்.
ஊசுடு ஏரி: புதுச்சேரியில் இலருந்து 10 கி.மீ. தொலைவில் வழுதாவூர் சாலையில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது ஊசுடு ஏரி. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பகுதிக்கு நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அரிய வகைப் பறவைகள் வந்து செல்லும்.
டிஜிட்டல் கோளரங்கம்: புதுச்சேரி விமானதள சாலையில் குளூனி பள்ளி அருகில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது டிஜிட்டல் கோளரங்கம் மற்றும் அறிவியல் பூங்கா. கடல்நீரில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் அவற்றின் தன்மைகளையும் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். கடற்சூழல், கடல் வளங்கள், கடல் வளத்தில் அச்சுறுத்தல்கள் கடல் பல்லுயிரியாக்கம், மற்றும் கடல் சுற்றுலா என இந்தக் காட்சியரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆழமான கடல் பகுதி எப்படி இருக்கும், சுறா மீன்களின் காலம், நிலம் மற்றும் கடல் இவற்றில் வாழும் உயிரினங்கள், பவளப்பாறைகளின் தன்மை என கடல் சார்ந்த பல்வேறு விஷயங்களை சிறுவர்களும், பெரியவர்களும் தெரிந்து கொள்ளலாம், மேலும், பல்வேறு விளையாட்டுகளின் மூலம் அறிவியலையும் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இடத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள்.
புதுச்சேரி அருங்காட்சியகம்: பாரதி பூங்காவின் எதிரே இருக்கிறது 1983ஆம் ஆண்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பிரெஞ்சுக் கட்டடக்கலையை பறைசாற்றி கம்பீரமாக நிற்கும் பில்டிங். இங்கே புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 2000 ஆண்டு பழைமையான பொருள்களும், புராதனக் காலத்துச் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சங்கு மற்றும் தந்தத்தால் ஆன மணிகள், ரோமானியப் பானை ஓடுகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், கிரேக்கச் சின்னம் அமைந்த படிக்கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள் போன்ற பல தொல்பொருட்களையும் காணலாம். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இத்தகைய அரியதும் சிறப்புவாய்ந்ததுமான இடங்களையும் மிஸ் பண்ணாம பார்த்து என்ஜாய் பண்ணுங்க.