மலை மாவட்டமான நீலகிரியில் 7 கிராமங்களில் மட்டுமே கோத்தர் இன பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் உதகை அருகே உள்ள கோக்கால் கிராமத்தில் மட்டும் 120 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குலதெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி மாத முதல் வாரத்தில் குலதெய்வ கோவில் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.
முன்னதாக தங்களது கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்களுக்கு வர சாவு என்று அழைக்கப்படும் இறந்தவர்களின் ஆத்மா சந்தியடையும் நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர். அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமலும் விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து வந்தனர்.
பின்னர் புது களி மண்ணை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உடனடியாக புது பானைகள், தட்டுகளை தயாரித்து புத்தாண்டு அன்று சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது கலாச்சார இசையுடன் நடனமாடினர்.
பெண்கள் தங்களது பழங்கால அணிகலன்களை அணிந்தவாறு வட்டமாக நடனமாடினர். அதன் பின்னர் குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனத்தை ஆடினர். இந்த ஆண்டு தங்களுக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 10 நாட்களாக அம்மக்கள் கொண்டாடிய விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. இறுதியாக நாளை( 04-01-23) பெண்கள் கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடதக்கதாகும்.