தமிழ்நாட்டில் ஊட்டி (உதகமண்டலம்) அழகும் அற்புதமும் நிறைந்த மலைவாசஸ்தலம். இங்கே சுற்றுலா செல்வதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். இயற்கையின் அழகும், பசுமையும், இதமான குளிரும், மேகம் தவழும் மலை முகடுகளும் என ஒரு சொர்க்கம்போல் அமைந்துள்ள இடமாகும். இங்கே சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இங்க பாரிம்பரியமிக்க மலை ரயிலில் செல்வது தனி இன்பமாகும்.
ஊட்டி ஏரி : 65 ஏக்கர் பரப்பளவில் அழகே வடிவாய் அமைந்திருக்கிறது ஊட்டி ஏரி. இங்கிருக்கும் படகு இல்லம் பிரபலமானது. இங்கே படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளை வாடகைக்கு எடுத்து சவாரி செய்யலாம். அருகில் இருக்கும் மினி ரயிலில் குழந்தைகள் சவாரி செய்து மகிழலாம். பொழுதுபோக்கு பூங்காவில் விளையாடி களிக்கலாம்.
சில்ட்ரன்ஸ் பார்க் : ஏரியின் கிழக்கு பக்க எலைலையில் இருக்கிறது சில்ட்ரன்ஸ் பார்க். இங்குள்ள புல்வெளியும் இங்கு பூத்துக்குலுங்கும் மலர்களும் ஆனந்தத்தை அள்ளிவரும். குழந்தைகள விளையாடி மகிழ ஏற்ற இடமாகும். பார்த்தால் அருகில் செயின்ட் தாமஸ் சர்ச், நிலையத்திலிருந்து ஊர்ந்து செல்லும் மலை ரயில், படகு சவாரி, குதிரை சவாரி போன்றவை அழகாக இருக்கும்.
தாவரவியல் பூங்கா : அரசு தாவரவியல் பூங்கா ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். புல்வெளியும், வண்ண வண்ண மலர்களும், மூலிகைகளும், க்யூட்டான போன்சாய்ஸ் மரங்களும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும் இங்கே உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். புற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்திய வரைபட வடிவம், உலக வரைபடம் போன்றவை தன்னகத்தே ஈர்க்கும். இந்த பகுதிகளல் விதவிமாக போட்டோ எடுப்பதை பலரும் விரும்புகின்றனர்.
தொட்டபெட்டா : நீலகிரி மலைத்தொடரின் மிக உயரமான இடமாகிய தொட்டபெட்டா, ஊட்டியில் பார்க்க வேண்டிய முக்கிய பகுதியாகும். 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த தொட்டபெட்டா தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து வசீகரிக்கும் பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்க தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே மேகங்கள் உங்களை தொட்டு விளையாடும் அழகை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.
எமரால்டு ஏரி : ஊட்டியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது எமரால்டு ஏரி, ஊட்டியில் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் இதுவும் ஒன்று. அமைதியாக அமர்ந்து இயற்கையின் அழகில் மயங்கி இன்பம் காண ஏற்ற இடமாகும். இங்கிருந்து சூரிய உதயத்தையும், அஸ்தமனம்த்தையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும்.
அவலாஞ்சி : இந்த இடம் ஊட்டியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள எமரால்டு பாரஸ்ட் வழியாக மேல் பவானி செல்லும் வழியில் இருக்கிறது. இந்த இடத்திற்கு செல்லும் சாலை வளைபுகளில் இருந்து பார்த்தால் அற்புதமான, அழகிய காட்சிகள் உங்களை வியப்பில் ஆழத்தும். அவலாஞ்சி குன்றின் மீதிருந்து பார்க்கும்போது அங்கு ஓடும் ஆறுகளும், பள்ளத்தாக்கின் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
முதுமலை வனவிலங்கு காப்பகம் : கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். இது யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள், காட்டெருமை, புலி, சிறுத்தை, மான், பறக்கும் அணில், சிவப்பு அணில், காட்டுப்பன்றி, முயல், போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கே இருக்கின்றன. வனத்துறையினரின் வாகனத்தில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக பயணித்தவாறே இவைகளை கண்டு ரசிக்கலாம்.
ரோஸ் கார்டன் : ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று. இந்த தோட்டம் சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய ஐந்து மாடிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கே 20,000 க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கே மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் வண்ண வண்ணமாய் பூக்கள் பூத்து குலுங்கும்.
பைகாரா அருவி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பைக்காரா அருவி. பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காராஅருவியாக இங்கே உருவெடுக்கிறது. சுமார் 55மீ உயரத்திலிருந்து சலசலத்துக் கொட்டும் அருவி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவந்திழுக்கிறது. இங்கே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
பைக்காரா படகு சவாரி : பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலை அருகே அமைந்திருக்கிறது பைக்காரா அணை. பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலமான இங்கே இருக்கும் படகு நிலையத்தில் நீண்டதூரம் படகுசவாரி செய்வது உங்களுக்கு நீங்காத அனுபவத்தைக் கொடுக்கும். இந்த பயணம் மலைகளுக்கு நடுவே பயணம் செய்வதைப்போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.