வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி மும்பையில் இருந்து 2 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். விரைவில் துவங்கி வைக்கப்பட உள்ள இந்த 2 ரயில்கள் மூலம் நாட்டில் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 10-ஆக உயர உள்ளது.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது நாட்டின் முதல் செமி ஹை-ஸ்பீட் ரயில் ஆகும். இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்ல கூடியது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்த முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புதுடெல்லி - கான்பூர் - அலகாபாத் - வாரணாசி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் மேலும் பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. Kavach டெக்னாலஜி ரயில்கள் மோதுவது போன்ற ரயில் பாதைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உதவும்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் என்ன ? : தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வெவ்வேறு வழி தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் பின்வருமாறு:
1. புதுடெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ஜம்மு காஷ்மீர்)
2. புதுடெல்லி - வாரணாசி
3. மும்பை - காந்திநகர்
4. சென்னை - மைசூர்
5. புதுடெல்லி - அம்ப் ஆண்டௌரா (இமாச்சலப்பிரதேசம்)
6. ஹவுரா - நியூ ஜல்பைகுரி
7. பிலாஸ்பூர் - நாக்பூர்
8. செகந்திராபாத் - விசாகப்பட்டினம் : மேற்கண்ட வழித்தடத்தில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை இணைக்கும் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த ஜனவரி 15-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து ஷீரடி மற்றும் சோலாபூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 2 ரயில்களும் மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் (CSMT) இருந்து புறப்பட்டு செல்லும்.
இந்த வந்தே பாரத் ரயில்கள் சதாப்தி ரயில் போன்ற ட்ராவல் கிளாஸ்களை வழங்குகிறது மற்றும் சிறந்த வசதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. முதல் 7 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீபத்தில் ஒட்டுமொத்தமாக 23 லட்சம் கிமீ தூரம் தொலைவை பயணம் செய்து முடித்துள்ளன. இந்த தொலைவானது பூமியை 58 சுற்று சுற்றி முடித்ததற்கு சமம். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் இதுவரை சுமார் 40 லட்சம் பயணிகளுக்கு சர்விஸ் செய்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கிடையே ஹவுரா (கொல்கத்தா )- ராஞ்சி (ஜார்க்கண்ட்) வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் விரைவு ரயில் விரைவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் தான் இந்த ரயில் பாதைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.