உலகின் சுற்றுச் சூழல் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. அதில் உடனடியான எதிர்விளைவை உண்டாக்கக் கூடியது காற்று மாசு. காற்று மாசடைவதால் அதை சுவாசிக்கும் பலருக்கும் பல்வேறு விதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சுவாசக் கோளாறு, கண் பாதிப்பு, தோல் நோய்கள் என பலவிதமான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதன்படி அதிக காற்று மாசு அடிப்படையிலான பட்டியலில் கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, நிலைமை இன்னும் மோசமாகியிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதே போல் சர்வதேச அளவில் பட்டியிலிடப்பட்ட அதிக காற்று மாசு உள்ள 50 நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருக்கும் 39 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
131 நாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற தரவுகள் மற்றும் இந்த நாடுகளில் நிறுவப்பட்டுள்ள 30ஆயிரம் காற்று மாசு கண்காணிப்பு கருவிகளில் இருந்த பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி உலக அளவில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் மிக மோசமான காற்று மாசு உள்ள நாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் காற்று மாசடைவதற்கு 20 முதல் 35 விழுக்காடு காரணம் இங்குள்ள போக்குவரத்து சாதனங்கள்தான் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கரி எரிக்கப்படும் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட காரணிகளும் காற்று மாசடைவதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் உலக அளவிலான அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் பிவண்டி நகரம் மூன்றாவது இடத்தையும் , டெல்லி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த இரண்டு நகரங்களிலும் காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 மடங்கு நச்சு அதிகம் இருப்பதாகவும் சர்வதேச காற்று தர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் டெல்லி உலக அளவில் அதிக காற்று மாசு உள்ள தலைநகரங்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. காற்று தர அறிக்கைப் படி சர்வதேச அளவில், அதிக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்திலும், சீனாவின் ஹொடான் நகரம் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.