அரிதான நிகழ்வாக தெலுங்கானா மாநிலம் கொருட்லா (Korutla) அரசு மருத்துவமனையில் சமீபத்தில் 12 கை விரல்கள் மற்றும் 12 கால் விரல்கள் என மொத்தம் 24 விரல்களுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தெலுங்கானாவில் பிறந்திருக்கும் இந்த ஆண் குழந்தை மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிஜாமாபாத் மாவட்டம் கம்மர்பள்ளி மண்டல் (Kammaripally mandal) என்ற பகுதியில் உள்ள யர்கட்லா கிராமத்தை சேர்ந்தவர்களான சுங்கராபு சாகர் (Sungarapu Sagar) மற்றும் ரவளி (Ravali). இந்த தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரவளிக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து Metpally அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டடார். இந்த நிலையில் அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் கொருட்லா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நார்மல் டெலிவரியில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் புதிதாக பிறந்த இந்த குழந்தை தனது இரு கைகளிலும் தலா ஆறு விரல்கள் மற்றும் தனது ஒவ்வொரு கால்களிலும் ஆறு விரல்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற நிகழ்வு சமீப காலங்களில் அரிதானது என்பதால் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை இக்குழந்தை ஈர்த்துள்ளது. கூடுதல் விரல்களுடன் பிறந்திருக்கும் இந்த குழந்தைக்கு அறுவை கிசிச்சை ஏதேனும் செய்யும் திட்டம் பெற்றோர்களுக்கு இருக்கிறதா என்பதை பற்றி அவர்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் 24 விரல்களுடன் பிறந்துள்ள இந்த குழந்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள கொருட்லா அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ வரலாற்றில் இது ஒரு மிகவும் அரிதான நிகழ்வு என குறிப்பிட்டனர். அசாதாரண கண்டிஷனில் பிறந்திருந்தாலும் இந்த ஆண் குழந்தை நல்ல ஆரோக்கியம் மற்றும் உரிய எடையுடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த குழந்தையின் பெற்றோர்களான சாகர் மற்றும் ரவளி தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எங்கள் மகனை நாங்கள் கடவுள் கொடுத்த வரமாக கருதுவதாகவும் கூறி இருக்கின்றனர். எங்கள் மகனை இளவரசன் போல் வளர்ப்போம் என கூறி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரவளி. இந்த குழந்தை பற்றிய செய்தி உள்ளூரில் வேகமாக பரவியதை அடுத்து பலர் இந்த அதிசய குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
பிறக்கும் குழந்தைக்கு கூடுதல் விரல்கள் இருப்பது ஒரு அரிதான நிலை என்றாலும் இது போல பல நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன. ஒரு நபருக்கு கூடுதல் கை விரல்கள் அல்லது கால் விரல்கள் இருக்கும் இந்த நிலை polydactyly என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூடுதல் விரல்கள் செயல்படாதவையாக இருக்கும் மற்றும் அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். ஆனால் இந்த குழந்தை விஷயத்தில் பெற்றோர்கள் அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுப்பார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.