டெல்லி மாசு... தடை, அபராதம் என உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லியில் மாசு காரணமாக மக்களால் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என சாடியுள்ள உச்ச நீதிமன்றம், குப்பையை எரித்தால் 1 லட்சம் அபராதம் வசூலிக்கவேண்டும் என்றும் கட்டுமானத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.


காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அமர்வு விசாரித்தது அதன் முடிவில் பல உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.


பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகமாவதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், விவசாயிகள் வாழ்வதற்காக மற்றவர்களை கொல்வதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர்


வைக்கோலை எரித்ததால் கிராம பஞ்சாயத்து தலைவரும், உள்ளாட்சி அமைப்புகளுடன் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளனர்


அவசர நிலை பிரகடனத்தின்போது கூட டெல்லி இதை விட நல்ல நிலையில் இருந்தது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


காற்று மாசை அதிகமாக்கும் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்த நீதிபதிகள், குளிர்சாதன கருவிகளுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.


ஜெனரேட்டர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லியில் மின்வெட்டு கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.


வாகனக் கட்டுப்பாட்டால் மாசு எப்படி குறையும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாகன மாசு தொடர்பான அறிக்கையை டெல்லி அரசு வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


மேலும் வரும் 6-ம் தேதி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.