இந்த மாத தொடக்கத்தில் சிக்கிம் சென்ற சுற்றுலாப் பயணிகள் பெரும் பனிச்சரிவில் சிக்கினர், இந்த சம்பவத்தில் 7 பேர் வரை பலியாகினர். இந்த துயர சம்பவத்தின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது.பலர் உயிரை பறித்த இந்த பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம் Barasat என்ற பகுதியை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வீடு திரும்பிய நிலையில் தாங்கள் சந்தித்த சம்பவத்தின் பயங்கர அனுபவத்தை விவரித்தனர்.
இந்த 3 சுற்றுலா பயணிகளும் நண்பர்கள் ஆவர். Barasat-ஐ சேர்ந்த மூன்று இளைஞர்களின் பெயர் சுமித் தாஸ், ததாகதா ராய் சௌத்ரி மற்றும் அரிந்தம் தாஸ்குப்தா.சொந்த ஊரிலிருந்து மகிழ்ச்சியாக சிக்கிம் டூருக்கு சென்ற இவர்கள் மூவரும் அங்கு மிகப்பெரிய மற்றும் பயங்கரத்தை அனுபவிக்க போகிறோம் என்பதை துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர்கள் மூவரும் உயிருடன் வீடு திரும்பினாலும் கூட தங்களின் கண்களுக்கு முன்பாகவே பனிச்சரிவில் சிக்கிய பலர் இறந்த தருணத்தை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை.
சம்பவம் பற்றிய பயங்கர அனுபவத்தை விவரித்துள்ள இவர்கள் தாங்கள் சுமார் அரை மணி நேரம் பனிக்கு அடியில் புதைந்து கிடந்ததாக தெரிவிக்கிறார்கள். தாங்கள் உயிருடன் மீண்டு வந்தது அதிசயம் என்று கூறும் இவர்கள், ஏதோ தெய்வீக சக்தியால் உயிருடன் திரும்பி வந்ததாக நினைக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான்முற்றிலும் பனிக்கு அடியில் புதைந்து விட்டதாக கூறி திகிலில் ஆழ்த்துகிறார்.
பனிக்கு அடியில் புதைந்திருந்த தாங்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு திணறலில் தவித்ததாக கூறுகின்றனர். பனிச்சரிவில் சிக்கிய இந்த மூவரில் இருவர் கிட்டத்தட்ட பனிக்கட்டிக்கு அடியில் புதையுண்டு, உள்ளூர் மக்களின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். பனிக்கட்டிகளுக்கு அடியில் சிக்கி கொண்ட சூழலில் என்ன செய்வது என எங்களுக்கு புரியவில்லை என்றனர். முதலில் இரு இளைஞர்களை ஓரளவு எளிதாக மீட்ட உள்ளூர் மக்கள், மூன்றாவது நபரை நீண்ட முயற்சிக்கு பிறகே மீட்டுள்ளனர்.
மரண வாசலுக்கு சென்று மீண்டு வந்த மூவரிடமும் இன்னும் பயம் விலகவில்லை. சிக்கிமிலிருந்து 17 மைல் தொலைவில், காரில் இருந்த இந்த மூன்று நண்பர்களும் சக பயணிகளும் ஒரு நீரூற்றுக்குப் பக்கத்தில் ஃபோட்டோக்களை கிளிக் செய்து கொண்டிருந்தபோது, அந்த பகுதி முழுவதும் அதிரத் தொடங்கியது. அவர்கள் சுதாரிப்பதற்குள் ஒரு பயங்கரமான பனி மேகம் சட்டென்று கீழ் நோக்கி வந்து சரிந்தது. இதன் காரணமாக பனிக்கு அடியில் புதைந்த பிறகு சுமித் சுயநினைவை இழந்துள்ளார். அந்த நேரத்தில் சுயநினைவை இழந்ததால் தான் சுமித் இன்று உயிருடன் இருப்பதாக அவரது மற்ற 2 நண்பர்கள் நினைக்கிறார்கள்.
தப்பி பிழைத்த மூவரில் ஒருவரான அரிந்தம் தாஸ்குப்தா பேசுகையில், ஏப்ரல் 4-ஆம் தேதி Changu Baba Mandir-ஐ தரிசிக்க வெளியே சென்றோம். 15 மைல்கள் வரை செல்ல அனுமதி பெற்றோம். நாங்கள் அங்கு சென்றவுடன், சிறந்த காட்சிக்காக எங்கள் ஓட்டுனர் இன்னும் சில மைல் தூரம் நடந்து செல்ல சொன்னார். சரியென்று சென்ற போது அவ்விடத்தில் சுமார் 100 -150 பேர் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் பனிச்சரிவு ஏற்பட்ட போது பீதியடைந்து ஓடினர். இதனை கண்டு பீதியடைந்த நாங்களும் எங்களைக் காப்பாற்றி கொள்ள 10-12 அடி குதித்தோம், ஆனாலும் எங்கள் மீது பனி விழுந்தது. நாங்கள் எப்படி உயிர் பிழைத்தோம் என எங்களுக்குத் தெரியாது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி பலியான ஒரு பெண் குழந்தை என் அருகில் தான் இருந்தாள். அவள் உயிருடன் இருப்பாள் என நினத்தேன் ஆனால் மீட்கப்பட்டது சடலமாக என்று அறிந்து வேதனை அடைந்தேன் என்றார்.
மறுபுறம் ராணுவ வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் சுமித் உயிர் தப்பியுள்ளார்ர். மண்வெட்டியால் பனியை வெட்டி சுமித்தை அவர்கள் பனியிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின் ராணுவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அவர் சுயநினைவு பெற்றார். சுமித் இன்னும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்றாலும் சிக்கிம் சென்ற மூவரும் நலமுடன் வீடு திரும்பியதால் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.