உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதில், தலைமை நீதிபதி, அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் சிக்க வைக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக, வழக்கறிஞர் உத்சவ் பெயின் உச்சநீதிமன்றத்தில் புகாரளித்தார். அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக செயல்பட தன்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும். இதன் பின்னணியில் முக்கிய மனிதர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் பேரம் பேசப்பட்ட போது பதிவான சிசிடிவி வீடியோக்களையும் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, சிலர் நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். எங்களை ஆத்திரமூட்டாதீர்கள் எனத் தெரிவித்த மிஸ்ரா, உச்சநீதிமன்றத்துடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என வசதி படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்போரையும் எச்சரிக்க விரும்புவதாகவும் கூறினார்.
அரசியல் அதிகாரம் மற்றும் பணபலத்தால் உச்சநீதிமன்ற விவகாரங்களில் தலையிட முடியாது என உறுதியாக தெரிவிக்க விரும்புவதாகவும் மிஸ்ரா கூறினார். கடந்த 4 ஆண்டுகளாகவே நீதித்துறை நடத்தப்படும் விதம் வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிற்பகலில் உத்சவ் பெய்ன் புகார் மீது தீர்ப்பளித்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்னாயக் விசாரிப்பார் என்றும், அவருக்கு சிபிஐ, உளவுத்துறை மற்றும் டெல்லி காவல்துறையினர் ஒத்துழைப்பார்கள் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.