பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தனக்கான அரசியல் அமைப்பை வடிவமைக்க முற்பட்டது. அதன் விளைவாக ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்று தனியான அரசியல் அமைப்பு உருவானது. இதை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் வகையில் குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். நமது இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அன்றைய கால கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கடந்து தான் இது இயற்றப்பட்டது. இதன் வரலாறையும், இதன் சிறப்பம்சங்களையும் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
வரலாறு : 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்திற்குப் பதிலாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தைத் தழுவி, இந்திய அரசியலமைப்ப்பானது அப்போது நிறுவப்பட்டது. அதன் பிறகு 1947-இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்திய அரசியலமைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் வரைவுக் குழுவிற்கு டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தலைமை தாங்கினார். இவர் ஒரு சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த பெரும் பாடுபட்டவர். கே.எம். முன்ஷி, ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், முகமது சாதுல்லா, என் மாதவ ராவ் மற்றும் கோபால சுவாமி அய்யங்கார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்ற மற்ற ஆறு உறுப்பினர்கள் ஆவர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்த வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார்.
சிறப்பம்சங்கள் : இந்திய அரசியல் அமைப்பானது உலகிலேயே மிக நீளமான அரசியல் அமைப்பாகும். மற்றும் செயலில் உள்ள இரண்டாவது பெரிய அரசியலமைப்பாகும். இது 25 பகுதிகளாகவும், 25 பகுதிகளில் 470 கட்டுரைகளையும், 5 பின்னிணைப்புகளில் 12 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. இது முதலில் 22 பகுதிகளிலும் 8 அட்டவணைகளிலும் 395 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மூலம் கூடுதல் அமைப்புகள் சேர்க்கப்படும்.
மதிப்பு : இந்திய அரசியலமைப்பானது அரசியல் அதிகார அமைப்பில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வகுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, நீதித்துறை, செயலாக்கத்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற கிளைகளுக்கு சமநிலைகளை இது வழங்குகிறது.
மக்களாட்சி : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில், இந்தியாவை ‘இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மத சுதந்திரம், கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள், அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை ஆகிய ஆறு அடிப்படை உரிமைகள் இந்திய அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.