கொரோனா காரணமாக புதுச்சேரியின் சுற்றுலாத்தலங்கள் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாவை பெரிய வருவாயாக நம்பியிருக்கும் புதுச்சேரியில் கடந்த நான்கு மாதங்களாக மாநில வருவாய் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இருப்பினும் சுற்றுலாவை மேம்படுத்த இழந்த வருவாயை மீட்டெடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறது.
கடற்கரையோரம் அமைந்துள்ள புதுச்சேரியில் இயற்கையாக அமைந்துள்ள கடற்கரை மணற்பரப்பை மையப்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு பூங்காக்களை அரசு அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் வீராம்பட்டினம் பகுதியில் அமைக்கப்படும் உணவு பூங்கா இயற்கையாக அமைந்துள்ள கடல் மணல் பரப்பு, பழமையான கடற்பாலம் ஆகியவற்றை ரசிக்கும் வகையில் உருவாகி வருகிறது.
புதுச்சேரியில் பண்டைய வரலாற்று இடமாகத் திகழும் அரிக்கமேட்டில் ரோமானிய காலத்திலிருந்து வர்த்தகம் நிகழ்ந்துள்ளது. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளதால் ரோமானிய கப்பலின் மாதிரி இந்த பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முழு வீட்டிற்கு தேவையான கல்-மண் கொண்டு இந்த கப்பல் அமைக்கப்பட்டிருக்கிறது.60 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட சிற்பம் இது. மிக உறுதியோடு அடித்தளமும் கட்டுமானமும் கொண்டது, முன்புறத்தில் தோன்றும் அன்னப் பட்சி சிற்பம் மட்டும் 275 கிலோ எடை கொண்டது.இதனை புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலை கூட ஓவிய பேராசிரியர் ராஜராஜன் அமைத்துள்ளார்.
பல்வேறு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கப்பலை உருவாக்கியுள்ளதாக ராஜராஜன் கூறுகிறார்.இந்த கப்பல் பழங்கால ரோமானிய கப்பலின் தோற்றத்தை கொண்டது, முன் புறம் கப்பலின் மேலே இருக்கும் அன்னப்பட்சி , மிக அரிதாக " கிரைன் ஷிப் " எனப்படும் தானியக் கப்பலின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கப்பலின் பின்புறம் ,சுற்றுலாப்பயணிகள் அமரும் வகையில் பின்புறம் வடிவமைக்கப்பட்டது. மரத்தை போன்ற வண்ணமும் ரேகையும் காண்பதற்கு மகிழ்வை தரும்.
இந்த கப்பலுடன் பிரஞ்சு கட்டடக் கலையை விளக்கும் வகையில் மண்டபம், அரிக்கன்மேட்டின் வர்த்தக நுழைவாயில் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது பிரெஞ்சிந்திய உணவுகளை வழங்குவதற்கான உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த உணவு பூங்கா எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.