இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் விமான பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட பயணி இவ்வளவு எடையை தான் தனது உடமையாக கொண்டு செல்ல முடியும் என்ற விதி உள்ளது. ஒரு குறிப்பிட்ட கிலோ அளவு வரையில்தான் பயணிகள் இலவசமாக விமானத்தில் உடமைகளை எடுத்துச்செல்ல முடியும். குறிப்பாக ஒரு தனி நபர் விமானத்தில் பயணித்தால் 7 கிலோ வரை உள்ள உடமைகளை அவருடன் கொண்டு செல்லலாம். இதற்கு மேல் கூடுதலாக பெட்டிகள் அல்லது உடமைகளை கொண்டு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு கிலோவிற்கு தனித்தனி கட்டணங்களை விமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
வானில் பறக்கும் விமானத்திற்கு பின்பற்றப்பட்டு வந்த இந்த நடவடிக்கை இனி ரயில் பயணித்திலும் கடைபிடிக்கப்பட போகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் முதல் பொது போக்குவரத்தாக ரயில் உள்ளது. இதற்கு காரணம் ரயில் பயணத்தில் நேரம் குறைவு, கட்டணம் குறைவு என்பதால் தான். ரயில்வே முதல் தேர்வாக இருப்பதற்கு மற்றொரு காரணம், விமானப் பாதைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் மக்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், அதற்கு இப்போது இந்தியன் ரயில்வே கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதாவது கூடுதல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வர உள்ளது. ரயில் பயணத்தின் போது நிறைய பயணிகள் ஏராளமான சாமான்கள், பெட்டிகள் உள்ளிட்ட உடமைகளை அதிக அளவில் எடுத்துச் செல்வதை ரயில்வே நிர்வாகம் கண்காணித்து வந்தது.
இந்நிலையில் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்களை ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிக லக்கேஜ்கள் ரயில் பயணத்தின் மகிழ்ச்சியை பாதியாகக் குறைக்கின்றன. ரயிலில் பயணம் செய்யும் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்லாதீர்கள். உங்களிடம் அதிகப்படியான சாமான்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று லக்கேஜை முன்பதிவு செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணிகள் 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். அவர்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து அவர்களுடன் கூடுதல் உடமைகளை கொண்டு செல்ல அனுமதி உண்டு.
இந்தியன் ரயில்வே ரயில் பெட்டிக்கு ஏற்ப எடையை நிர்ணயித்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிகள் 40 கிலோ எடையை எடுத்துச் செல்லலாம். செக்கண்டு கிளாஸில் பயணித்தால் 35 கிலோ வரையில் இலவசமாக கொண்டுச் செல்ல முடியும். ஏசி முதல் வகுப்பில் பணிப்பவர்கள் அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும், அதுவே ஏசி -2 டையர் வகுப்பில் பயணித்தால் 50 கிலோ வரையிலும் , ஏசி-3 டையர் வகுப்பில் பயணித்தால் 40 கிலோ வரையிலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதைத் தவிர கூடுதலாக உடமைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்துவதோடு, ரயில்வே உடமைகளை புக் செய்யும் அலுவலகத்தில் முன்பதிவும் செய்ய வேண்டும். குறைந்தது ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்னதாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
என்ன தான் கூடுதல் கட்டணம் செலுத்தினாலும் அடுப்பு, கேஸ் சிலிண்டர்கள், தீப்பற்றக்கூடிய ரசாயனம், பட்டாசு, அமிலம், துர்நாற்றம் வீசும் பொருட்கள், தோல், எண்ணெய், கிரீஸ், நெய் போன்ற பயணிகளுக்கு சேதம் விளைவிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ரயில் பயணத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது குற்றமாகும். மேலே குறிப்பிட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களை யாராவது எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அந்த பயணி மீது ரயில்வே சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் ரயில்வே நடவடிக்கை எடுக்கப்படும்.