ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி தனது குடும்ப உறுப்பினர்களையும், நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும், ஆனால் நாட்டின் வளர்ச்சி பற்றி எப்போதும் அவர் பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் மகாபாரதத்தில் வரக்கூடிய துரியோதனன் கதாபாத்திரம் போன்று பிரதமர் மோடி கொடூரமானவர் என்றும் அவர் சாடினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மோடியை பிரதமராக ஏற்கமாட்டேன் என மம்தா பானர்ஜி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அரசியல் சாசனப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமர் என்றும், மம்தா பானர்ஜி இதனை ஏற்காததால் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சி முழுமையாக தோல்வியடைந்து விட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் பிரியங்கா காந்தி, அமேதி தொகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகளுக்கு விதிமீறல்களை கற்று கொடுப்பதாக குற்றம்சாட்டிய அவர், இத்தாலிக்கு சென்று இதுபோன்ற விதிமீறல்களை கற்றுக்கொடுக்கட்டும் என்றும் கூறினார்.