இந்தியாவின் வலியுறுத்தலின்பேரில், ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட ஐநா சபை ஒப்புதல் அளித்தது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இதனை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மனித சமூகத்துக்கான யோகா என்ற கருத்துரு அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதன்படி, கர்நாடகாவின் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு யோசா செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா உலகளவில் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது. யோகா இந்த உலகின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. இது தொற்றுநோயிலும் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியது. இந்த ஆண்டின் கருப்பொருள் மனித நேயத்திற்கான யோகா. இந்த நாளில் ஐநா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். யோகா சமூகத்திற்கு அமைதியை கொண்டுவருகிறது’ என பேசினார்.