அதிக தூரம் பயணம் செய்வது என்றால் ரயில் பயணம்தான் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக இரவு பகல் என ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். 12 மணி நேரத்துக்குள்ளான பயணம் என்றாலும் பலரும் இரவு நேர பயணத்தையே விரும்புவார்கள். இரவில் பயணம் செய்தால் ரயிலில் தூங்கலாம். விடியற்காலையில் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம் என்ற எண்ணம் ரயில்வே பயணிகளிடம் உள்ளது. அப்படி இரவில் ரயிலில் பயணிக்க வேண்டுமென்றால் சில விதிமுறைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்திய ரயில்வே, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கும் ரயில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை ஆன் செய்து பாடல்களைக் கேட்கவோ, அழைப்புகளைச் செய்யவோ, சத்தம் போடவோ அல்லது சத்தமாகப் பேசவோ கூடாது. இரவு 10 மணிக்கு மேல் ரயில் விளக்குகளை தவிர மற்ற விளக்குகளை எரிய விடக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் கூட்ட நெரிசலால் மற்ற பயணிகளின் தூக்கத்தை கெடுக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது
புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் அல்லது சக பயணிகளுக்கு அசௌகரியம் அல்லது தீங்கு விளைவிக்கும் பிற செயல்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயிலில் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மிக முக்கிய விதியான இது ரயிலில் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகுக்கிறது
பயணிகளின் வசதிக்காக, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடுவில் இருக்கும் பெர்த்தை திறந்து பயன்படுத்த ரயில்வே துறை அனுமதி அளிக்கிறது. அதாவது நடுவில் உள்ள பெர்த்தை முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த பெர்த்தை திறந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதில் தூங்கலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடுத்தர பெர்த்தை மூடிவிட்டு கீழ் பெர்த்தில் அமரலாம்.