நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகவிலையில் விற்பனையாகும் சூழலில் மாற்று எரிசக்தியான மின்சார வாகனங்களை மக்கள் வாங்கும் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாகவும் இருப்பதால் அரசும் இதுபோன்ற மாற்று எரிபொருள் பயன்பாட்டை மானியம் போன்ற உதவிகளுடன் ஊக்குவித்து வருகின்றன.
அதேவேளை, மின்சார வாகனங்களின் முக்கிய பிரச்சனை அவற்றின் பேட்டரிக்கு சார்ஜ் போடுவது தான். குறுகிய தூர பயணங்களுக்கு பரவாயில்லை, ஆனால் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள இவற்றுக்கு சார்ஜ் ஏற்றுவது சாத்தியம் குறைவானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக புதிய முயற்சி ஒன்றை மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்து காட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் கட்ஜுரிடங்கா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜித் மண்டோல். தொழிலதிபரான இவர், தனது டாடா நானோ காரை சூரிய சக்தியில் இயங்கும் சோலார் காராக மாற்றி அசத்தியுள்ளார். இவர் தனது காரின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி, சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரிகளை சார்ஜ் செய்து காரை இயக்கும் பலே திட்டத்தை செய்து காட்டியுள்ளார்.
மனோஜித் உருவாக்கியுள்ள இந்த சோலார் காரை இப்பகுதியினர் வியப்புடன் பார்க்கின்றனர். சுமார் 100 கிமீ பயனத்திற்கு ரூ.30 முதல் ரூ.35 மட்டுமே செலவாகிறது என்கிறார் மனோஜித். சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 80 பைசா மட்டுமே செலவாகும். இந்த காரில் இன்ஜின் இல்லை. எனவே ஸ்டார்ட் செய்யும் போது இன்ஜின் சத்தம் வராது. இன்ஜின் இல்லை என்றாலும் கியர் சிஸ்டத்தில் இயங்கும் இந்த கார் நான்காவது கியரில், கிட்டத்தட்ட 80 கிமீ வேகத்தை எட்டும்.
சிறுவயதிலிருந்தே புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பம் கொண்டவர் மனோஜித். அதனால் தான் எல்லோரையும் போல எலக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்று யோசிக்காமல் தனது சொந்த காரையே சோலார் காராக மாற்றியுள்ளார். இதை செய்வதற்கு பல சவால்களை சந்தித்தாலும், விடா முயற்சியுடன் இதை சாத்தியப்படுத்தி ஊர் முழுக்க வலம் வருகிறார் மனோஜித்.