டாடா குழும நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர் சைரஸ் மிஸ்திரி அண்மையில் சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து, சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை அதிவேகமாக இயக்குவது முதல் மது அருந்தி வாகனம் ஓட்டுவது வரையில் விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலமாக உயிரிழந்தவர்களில் 11 சதவீதம் விபத்துகள் என்பது சீட் பெல்ட் அணியாமல் சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம் வர வாய்ப்பு உண்டு
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முறைப்படி அணிய தவறினாலும் அபராதம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்-ஐ நீங்கள் முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். பிஐஎஸ் சான்றிதழும் அவசியம்.
குழந்தைகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்
குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.