இந்தியாவில் திருமணங்கள் ஒரு ஆடம்பரமான நிகழ்வு. வாழ்க்கையில் ஒரு முறைதான் நடக்கிறது என்று சொல்லி கோடிக்கணக்கில் திருமணங்களுக்காக செலவு செய்கிறார்கள். ஆடம்பர அலங்காரங்கள் முதல் விலையுயர்ந்த பரிசுகள் என்று தங்கள் திருமணம் தனித்துவமாக மக்கள் நினைவில் நிலைக்க வேண்டும் என்பதற்காக பிரபலங்களும் முக்கிய தலைவர்களும் திருமணத்திற்கு செய்யும் செலவுகள் எல்லாம் எக்கச்சக்கம்.
கொரோனா காலத்திலும் சரி அதற்கு முன்பு இருந்த பொருளாதார மந்தநிலையில் கூட, இந்திய குடும்பங்கள் திருமணங்கள் என்று வரும்போது பலஅளவுகோலை அமைத்து, ஒரு அடையாளத்தை உருவாக்க புதுமையான யோசனைகளைக் கொண்டு வந்தார்கள். அப்படி நடந்த இந்தியாவின் ஆடம்பர திருமணங்கள் மற்றும் அதில் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுகள் பற்றி தான் பார்க்க போகிறோம்.
தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த பாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் ஆகியோர் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் பிரமாண்டமான திருமணங்களில் ஒன்றாகும். இந்த விழா உதய்பூரில் உள்ள உம்மத் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு ₹ 105 கோடி செலவில் நடைபெற்றது. முக்கியமாக இவர்களது $200,000 (இந்திய மதிப்பில் 160கோடி )மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரம் அதிகம் பேசப்பட்டது.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணத்துக்கு சுமார் ₹ 90 கோடி செலவிடப்பட்டுள்ளது. பொதுவாக ஏப்ரலில் திறக்கப்படும் இவர்கள் திருமணம் செய்து கொண்ட ரிசார்ட் இவர்களுக்காகவே டிசம்பரில் பிரத்யேகமாக திறக்கப்பட்டது. திருமணத்திற்கு 50 சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இங்கு ஒருவர் ஒரு வாரம் தங்குவதற்கு ஆகும் செலவு சுமார் ஒரு கோடி ரூபாய். அதன்படி, விருந்தினர்கள் தங்குவதற்கு மட்டும் ரூ.45-50 கோடி செலவிடப்பட்டது.அதேபோல திருமண மோதிரத்தை வாங்குவதற்காக விராட் ஆஸ்திரியாவுக்கு சிறப்பு பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமாகத் தெரியும்படியான 1 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளார்.
"தென்னிந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த திருமணம்" ஆக இருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.ரவீந்திரா தனது மகன்களான எஸ்.ரோஹித் மற்றும் எஸ்.ரஞ்சித் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் நடத்திய திருமணம்தான். சொந்தத்திற்குள் நடந்த இந்த திருமணத்தின் தாலி பிளாட்டினம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டது. அதோடு மணப்பெண்கள் திருமண நிகழ்ச்சி முழுவதும் பிரபல ஆடை வடிவமைப்பாளராக மணீஷ் மல்ஹோத்ரா படைப்புகளை அணிந்திருந்தனர். விழாவில் பெங்காலி, ராஜஸ்தானி, பஞ்சாபி என்று பல்வேறு பாரம்பரியங்களை குறிக்கும் ஜோதா அக்பர், நீருக்கடியில் உள்ள காட்சிகள் மற்றும் அரேபிய இரவுகள் போன்ற தீம்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்திற்கு மொத்தம் 550 கோடி ரூபாய் செலவானது . ஒரு துறைக்கு ஒதுக்கும் பட்ஜெட் அளவுக்கு செலவு செய்து விஜயநகரப் பேரரசின் பெங்களூரு மாளிகையை வாடகைக்கு எடுத்து நுழைவு பாதையில் வரவேற்புக்கு மட்டும் இரண்டு பெரிய செயற்கை யானைகளை நிறுத்தியுள்ளார். 5 கோடி செலவில் LCD திரையுடன் கூடிய அழைப்பிதழ், 30 ஏக்கர் பரப்பளவில் பாலிவுட் வகை செட்கள், 50,000 விருந்தினர்கள், 3,000 பாதுகாவலர்கள் மற்றும் பவுன்சர்கள் கொண்டு திருமணம் நடந்தது.
2018 இல் முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் ஆனந்த் பிரமாலின், திருமண அழைப்பிதழ்கள் டோல்ஸ் & கபனா பெட்டியில் திருமணத்தன்று நகைகளாக அணியக்கூடிய செயின்களோடு வழங்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், எஃகு தொழிலதிபர் லட்சுமி மிட்டல், பா.ஜ.கவின் தேவேந்திர ஃபட்னாவிஸ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் பங்கேற்றனர். விருந்தினர்களின் 100க்கும் மேற்பட்ட தனிப்பட்ட விமானங்கள் நிறுத்துவதற்காக உதய்பூர் விமான நிலையத்தில் ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டதாம்
2011 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் கன்வர் சிங் தன்வாரின் மகன் லலித், முன்னாள் எம்.எல்.ஏ., சுக்பீர் சிங் ஜௌனாபூரியாவின் மகள் யோகிதாவை ஹரியானாவில் உள்ள ஜௌனாபூர் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். மணமக்களுக்கு பரிசாக ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ₹ 21 கோடி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் 30 கிராம் வெள்ளி பிஸ்கட், ஒரு சஃபாரி சூட் செட், ஒரு சால்வை மற்றும் ₹ 2,100 ரொக்கம் அடங்கிய பொட்டலம் தாம்பூலமாக வழங்கப்பட்டது .