சோசலிசத் தலைவராக அறியப்பட்ட முலாயம், உ.பி-யில் காங்கிரஸ் வலுவிழந்தபின் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தைக் கைப்பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் ராம் நரேஷ் யாதவ் தலைமையில் 1977-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, முலாயம் சிங் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
1992 அக்டோபர் 4-ஆம் தேதி அவர் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். பாஜகவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அவர் கான்ஷி ராமின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். 1993 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் முலாயம் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 2003 ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்
1996-ல் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டார். 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து தேவ கெளடா ராஜினாமா செய்த பிறகு, முலாயம் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது போட்டியாளரான லாலு பிரசாத் யாதவ் அவருக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.
2012 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முலாயம் சிங் தனது மகன் அகிலேஷ் யாதவை தனது வாரிசாக்கினார். உட்கட்சி பூசல், மகன் உயர்த்திய போர்க்கொடி என நெருக்கடிகள் ஒருபுறம் வயது முதிர்வு மறுபுறம் என முடங்கிய முலாயம் சிங் யாதவ் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் ஒருமுறை மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ் கூறியது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்குள்ளானது.
1967-ம் ஆண்டு தொடங்கிய அரசியல் பயணித்தில் மூன்று முறை முதலமைச்சராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 10 முறை சட்டமன்ற உறுப்பிராகவும் முலாயம் சிங் இருந்துள்ளார். நேதாஜி என உத்தரபிரதேச மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ் நெருக்கடி காலகட்டத்தில் 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.