ஆப்கானிஸ்தானில் மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்து இந்தியா செய்து கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் - இன்று உலகமே எட்டியிருந்து பார்க்கும் ஒரு போர்க்கள பூமியாக மாறியிருக்கிறது. பல்வேறு காரணங்களால் இன்று ஆப்கானிஸ்தானின் நிலையை நினைத்து நாம் அனுதாபம் காட்ட முடியுமே தவிர வேறு ஒரு நாட்டில் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தும் சக்தி நம்மிடையே இருக்கவில்லை.
ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் வைத்துக் கொண்டு தாலிபான்கள், முஜாகிதீன்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த மண்ணில் இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களையும், நாச வேலைகளையும், பெண்களை அடிமைப்படுத்தியும் வைத்திருந்தனர். ஆனால் அமெரிக்காவில் நாச செயல்களை அரங்கேற்றியதற்கு பழிவாங்கும் வகையில் தான் ஒசாமா பின்லேடனை வேட்டையாடும் வகையில் ஆப்கனில் கால் பதித்தது அமெரிக்கா. பின்னர் அங்கு மனிதாபிமான அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களை அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியாவும் செய்து தந்தது. அம்மக்களின் தாகம் தீர்பதற்காக சல்மா அணையை கட்டிக் கொடுத்தது இந்திய அரசு தான். இவ்வளவு ஏன் கட்டமைப்பு வசதிகளை ஆப்கன் மக்களுக்காக செய்து கொடுத்ததற்காக தாலிபான்களே கூட இந்தியாவை சில நாட்களுக்கு முன்னர் பாராட்டினர். ஆப்கனில் இந்தியா செய்து கொடுத்த முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய அணையாக விளங்கும் சல்மா அணையை ஈராக்கை ஒட்டிய ஹெராட் மாகாணத்தின் செஸ்தே ஷரிப் மாவட்டத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு.
640 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணை 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் தேவையை பூர்த்தி செய்வதோடு அப்பகுதி மக்களுக்கு மின் தேவையையும் பூர்த்தி செய்து தருகிறது.
ஆப்கன் - இந்திய நட்புறவு அணை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த அணையை 2016-ல் பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் இணைந்து திறந்து வைத்தனர். இது ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்த பெரும் முதலீடாகும்.
கடந்த இரண்டு மாதத்திற்குள் மட்டும் இந்த சல்மா அணை மீது 3 முறை தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது நினைவுகூறத்தக்கது.
தலைநகர் காபுலில் அமைந்துள்ள ஆப்கன் பாராளுமன்றத்தை சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா கடந்த 2015ம் ஆண்டு கட்டித் தந்தது. இதுவும் ஆப்கனுக்கு இந்தியா அளித்த பரிசு தான். பிரதமர் மோடி இதனை திறந்து வைத்தார்.100 ஏக்கர் பரப்பளவில் இந்த பாராளுமன்ற வளாகத்தை இந்திய பொதுப்பணித்துறையினர் கட்டிக் கொடுத்தனர். இந்த வளாகத்தின் ஒரு பகுதிக்கு முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் Zaranj-Delaram (Route 606) நெடுஞ்சாலையானது கட்டித் தரப்பட்டது. 218 கிமீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை 2009-ல் திறக்கப்பட்டது. ஆப்கனின் பொருளாதார வழித்தடமாக விளங்குகிறது. ஈரான் எல்லையில் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை ஆப்கனின் முக்கிய நகரங்களான தலைநகர் காபுல், காந்தகார், கஜ்னி, ஹெராட் மற்றும் மசார் இ ஷரிஃப் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இத்திட்டத்தின் மதிப்பு 1100 கோடி ரூபாயாகும். இந்த வழித்தடம் அமைந்ததால் 12 முதல் 14 மணி நேரங்கள் பயண நேரம் மிச்சமானது. இந்த தூரத்தை வெறும் இரண்டு மணி நேரங்களில் கடக்க உதவுகிறது. இந்திய எல்லை சாலைகள் நிறுவனத்தால் கட்டித்தரப்பட்ட இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் உலகளாவிய தரத்தை பிரதிபலிப்பதாக விளங்குகிறது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜி இதனை திறந்து வைத்தார்.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய குழந்தைகள் நல மருத்துவனையாக விளங்கும் இந்த மருத்துவமனை முதன் முதலில் 1985ம் ஆண்டு இந்தியா சார்பில் கட்டித்தரப்பட்டது. பின்னர் போரினால் ஒரு பகுதி சேதாரம் அடைந்தது. காபுலில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனை ஆப்கனின் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக போற்றப்படுகிறது. இந்த மருத்துவமனையை மீண்டும் புணரமைத்துக் கொடுத்தது இந்தியா.
இது தவிர இந்தியா சார்பில் 400 பேருந்துகள், 200 மினி பேருந்துகள், 105 பிற பயன்பாட்டு வாகனங்கள், ஆப்கன் படையினருக்கு 285 ராணுவ வாகனங்கள், 10 ஆன்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
காபுல் நகருக்கு மின்சாரம் அளிக்கும் வகையில் 220 கிலோவாட் மின் வழித்தடம் ஒன்றையும் பக்லான் மாகாணத்தில் இருந்து காபுல் நகருக்கு நிறுவித்தந்தது. என்னற்ற தொலைத்தொடர்பு வழித்தடங்கள் சீரமைத்துத் தரப்பட்டிருக்கின்றன. மேலும் பல்வேறு மாகாணங்களில் என்னற்ற கட்டமைப்பு வசதிகளையும் இந்தியா ஏற்படுத்தித் தந்தது.
ஆனால் தாலிபான்கள் ஆப்கன் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பல கோடி மதிப்புள்ள இந்த திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.