சுந்தரவனக்காடுகள் என்றாலே அமைதியான நதி, இரண்டு பக்கமும் அரண் போன்ற மரங்கள் என முற்றிலும் மாறுபட்ட சூழலோடு அமைந்திருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வனச்சட்டத்திற்குள் கொண்டு வந்து பல்வேறு சட்டங்களை இயற்றினர் என்கிறது வரலாறு. என்ன தான் பல்வேறு சட்டங்களுக்குள் மக்களைக் காக்க கொண்டு வந்தாலும் சுந்தரவனக்காடுகளில் வாழும் போகுல் மோண்டல் இனத்தவர்களின் வாழ்க்கை என்பது பெரும் அச்சுறுத்தல் நிறைந்ததாக உள்ளது.
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே அமைந்துள்ள சுந்தரவனக் காடுகளில் சமீப காலங்களாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருகின்றனர். இயற்கையான வீடு, இயற்கையில் விளையும் உணவுப்பொருள்கள், நல்ல காற்று, அமைதியான சூழல் என இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும், இவைத் தான் சில நேரங்களில் இவர்களுக்கு பிரச்சனைகளைத் தருகின்றன.
காடுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் அவர்களின் வாழ்க்கையை அப்படியே புரட்டிபோட்டுவிடுகிறது. ஆம் பயங்கரமான இயற்கை சீற்றங்களின் போது வேலிகள் அடியோடு வீழ்ந்துவிடுவதால், புலிகள் உள்பட பல வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. மேலும் தண்ணீர் ஊருக்குள் புகுவதோடு, முதலைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதால் பல இன்னல்களை தற்போதும் சந்தித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள்.
சுந்தரவன பகுதி மக்களின் வேதனை : சுந்தரவனக்காடுகளின் தற்போதை நிலைக்குறித்து உள்ளூர்வாசியான அக்பர் காசி தெரிவிக்கையில், குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழையாமல் இருக்க வேண்டும் என்று மின்வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சிக்கி பல மான்கள் மற்றும் புலிகள் அடிக்கடி உயிரிழப்பதையடுத்து இந்த வேலிகள் அனைத்தும் அடியோடு பிடுங்கி எடுத்துவிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். இதன் காரணமாக பல முறை வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்தில் தான் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
வனத்துறை எடுத்த நடவடிக்கை : சுந்தரவனக் காடுகளின் வசிக்கும் மக்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்த வனத்துறை, வனவிலங்குகள் உள்ளே வருவதைத் தடுக்க நைலான் மற்றும் சில இடங்களில் பல வகையான மின்சார வேலிகளை வழங்கினர். இருந்தப்போதும் பல இயற்கை சீற்றங்களால் அவை சேதம் அடைகிறது. இதையடுத்து மக்களின் போதிய பாதுகாப்பிற்காக நவீன வேலிகள் வன அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இருப்பினும் ஹிங்கல்கஞ்சின் சம்சேர்நகர் பகுதி, பாசிர்ஹத் மகாகுமாவின் சுந்தர்பன் பகுதி மக்களின் மனதில் புலிகள் பற்றிய பயம் போகவில்லை.