டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. காற்று தர குறியீடு அளவு ஆனந்த் விகார் பகுதியில் 484-ஆகவும், முன்ட்கா பகுதியில் 470-ஆகவும் பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிக மோசமான அளவு என்ற நிலையில் இருந்து கடும் மோசமான அளவு என்ற நிலையை காற்று மாசு எட்டியிருக்கிறது.
இதனால் டெல்லி நகரமே பனிமூட்டத்தால் மூடப்பட்டது போல காட்சியளித்தது. அக்ஷர்தாம் கோயிலே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இதனால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு 600 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காற்றுமாசு காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கும் என டெல்லி அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தடையை மீறி நேற்று டெல்லியில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.