1) பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு
பஞ்சாப்பில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜனவரி 5ம் தேதி சென்றார். வழியில் திடீரென விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்டார். உச்சபட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதுதொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
2) அணிவகுப்பு ஊர்திகள் புறக்கணிப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா அரசுகளின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டன. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சென்னையில் நடந்த குடியரசுத் தின விழாவில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. அதுமட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களுக்கு இந்த ஊர்திகள் அனுப்பப்பட்டன.
3) ஹிஜாப் விவகாரம்
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என 2022 மார்ச் மாதம் அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஹிஜாப் ஆடைகளை அணிந்து வருவதற்கு தடை விதித்தது செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இதனால் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
4) ஆளுநர்கள் - முதலமைச்சர்கள் மோதல்
தமிழ்நாட்டில் ஆளுநர் - தமிழ்நாடு அரசு இடையே தொடர்ந்து பனிப்போர் நீடித்து வருகிறது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவர் வரை சென்று மனு அளித்தன. ஆன்லைன் ரம்மி உள்பட பல மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. அப்போது ஆரம்பித்த மோதல் இப்போதும் தொடர்கிறது. இதுபோலவே கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி என பல மாநிலங்களில் ஆளுநர் - ஆளும் அரசு இடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
5) செஸ் ஒலிம்பியாட்
உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதமர் மோடியின் புகைப்படங்களை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டினர். இதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் படத்தை மை பூசி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6) ராகுலிடம் விசாரணை - காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஜூலை மாதம் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை பாஜகவின் பழிவாங்கும் அரசியல் என விமர்சித்த காங்கிரஸ் கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்களை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இது அப்போது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
7) திரைப்பட சர்ச்சைகள்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், திரைப்படத்தை பாஜகவினர் வரவேற்றனர். அத்துடன், மத்திய பிரதேசம் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. இதேபோல காஷ்மீர் பைல்ஸ், பொன்னியின் செல்வன், ஆர்ஆர்ஆர், நட்சத்திரம் நகர்கிறது, லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்களும் சர்ச்சைகளை சந்தித்தன. சமீபத்தில் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் பாடல் காட்சியில் காவி உடை இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.
9) மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்தது
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பு குற்றம்சாட்டியது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதனையடுத்து, பாஜகவின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
10) நாடாளுமன்ற வார்த்தைகள் பயன்பாடு
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை கடந்த ஜுலை மாதம் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், சர்வாதிகாரி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கவில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார்.
11) ஜடேஜா to தோனி ; மாறிய சிஎஸ்கே கேப்டன்ஷிப்
கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, அதனை ஜடேஜாவுக்கு அளித்தார். ஆனால் ரிசல்ட் மோசமாக அமைந்ததால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியே ஏற்றுக் கொண்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காயம் காரணமாக தொடரில் இருந்து அவர் விலகியதாகவும், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியானது. என்றாலும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டுள்ளது சிஎஸ்கே.
12) காங்கிரஸ் தலைவர் தேர்தல் சர்ச்சை
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், காந்தி குடும்பம் அல்லாத புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார். அவருக்கு சோனியா, ராகுல் ஆதரவு இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்ததால் மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து சசி தரூர் வேட்பாளரானார். எனினும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே தலைவராக பதவியேற்றார்.