பேரீட்சை என்றாலே அதற்கு அரபு நாடுகள் தான் பெயர்பெற்றவை ஆகும். அதிலும் சவுதி நாட்டின் பேரீட்சை வகைக்கு இன்னும் கூடுதல் சிறப்பு உண்டு. பல்வேறு தரங்கள் மற்றும் வகைகளில் அரபு நாடுகளில் இருந்துதான் இந்தியாவுக்கு பேரீட்சை இறக்குமதி செய்யப்படுகிறது. மெஜூல் மற்றும் அஜ்வா என்னும் வகை பேரீட்சைகள் தரத்தில் மிக உயர்ந்தவை என்று அறியப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கத்வால் என்னும் பகுதியைச் சேர்ந்த கோபால் மொண்டல் என்னும் விவசாயி தன்னுடைய நிலத்தில் மேற்கண்ட வகை பேரீட்சையை சாகுபடி செய்துள்ளார்.
அஜய் நதிக்கரையோரத்தில் இவரது தோட்டம் செழிப்பாக காட்சியளிக்கிறது. பல செடிகளில் ஏற்கனவே பேரீட்சை காய்கள் காய்க்க தொடங்கிவிட்டன. மேலும் பல செடிகளில் தற்போது பூ பூத்துள்ளது. இதுகுறித்து கோபால் மொண்டல் கூறுகையில், “சவுதி அரேபிய நாட்டின் பேரீட்சை வகைகள் இந்தியாவிலும் தற்போது சாகுபடி செய்யப்படுகின்றன. குஜராத்தில் இருந்து விதைகள் அல்லது செடிகளை பெற்று நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். இந்தப் பேரீட்சைகளில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் இதற்கான தேவை மிக, மிக அதிகமாக உள்ளது’’என்று கூறினார்.
எவ்வளவு செலவு.! : சுமார் 80 செண்ட் அளவிலான நிலத்தில் பேரீட்சையை கோபால் மொண்டல் சாகுபடி செய்திருக்கிறார். இதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “யூடியூப் வீடியோ பார்த்து இந்த பேரீட்சையை சாகுபடி செய்ய நான் முடிவு செய்தேன். இதுவரையிலும் ரூ.1.5 லட்சம் செலவாகியுள்ளது. ஏற்கனவே வங்கதேச விவசாயிகள் இதை பயிர் செய்துள்ளனர்.
இந்த நிலையில், வளம் மிக்க எங்களுடைய மண்ணில் இதை சாகுபடி செய்வது ஒன்றும் பெரிய சவாலாக இல்லை. இப்போதே பல செடிகளில் காய்கள் காய்த்துவிட்டன. இதில் ஆண் மரம், பெண் மரம் உண்டு. இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பேரீட்சை சாகுபடி மிக எளிமையாக உள்ளது’’ என்று தெரிவித்தார். 20 அடிக்கு ஒரு செடி என்ற அளவில் பேரீட்சையை சாகுபடி செய்துள்ளனர்.
அஜ்வா மற்றும் மெக்ஜுல் வகை பேரீட்சை விதைகளை துபாய் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஓராண்டுக்கு முன்பு இறக்குமதி செய்து சாகுபடி பணியை தொடங்கியதாக கோபால் மொண்டல் தெரிவித்தார். சவுதி அரேபியாவைப் போல இனிப்பான பேரீட்சை கிடைக்க இன்னும் 5, 6 ஆண்டுகள் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார். மாற்றுபயிர் சாகுபடி முயற்சியில் இதை அவர் செய்து வருகிறார்.
முன்னதாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2017ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். விவசாயத்தின் மீதுள்ள பற்று காரணமாக, தன் ஓய்வு காலத்தில் விவசாய பணிகளை கோபால் மொண்டல் செய்து வருகிறார். அஜய் நதிக்கரை ஓரமாக இன்னும் ஏராளமான நிலம் அவருக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் அங்கும் பேரீட்சை சாகுபடி செய்ய திட்டமிட்டிருக்கிறார்.