

இந்திய விமானப் படையின் 87-வது ஆண்டு தினத்தை ஒட்டி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைமைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் விமானப் படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


பின்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்திற்கு சென்ற மூவரும், வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதை அடுத்து, பாலகோட்டில் சர்ஜிகல் தாக்குதல் நடத்திய படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் என்ற விருதை விமானப் படைத் தலைமை தளபதி பதாரியா வழங்கினார். பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்ற படைப்பிரிவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, விமானப் படை சாகசம் தொடங்கியது. இதில், அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட சினூக் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தன.


மிராஜ் 2000, சுகோய் 30 எம்.கே.ஐ. ஆகிய போர் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. மிக் பைசன் போர் விமானங்களின் சாகசத்தை, விங் கமாண்டர் அபிநந்தன் முன்னின்று வழிநடத்தினார்.