பிரசித்தி பெற்ற தாயனூர், மலையனூர் மாசாணி அம்மன் கோயில்களுக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்த கோவிலாக விளங்குவது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மணியனூர் மாசாணி அம்மன் கோயில். மேலும் மாசாணி அம்மன் கோயில் ஏன் மயான பகுதியில் இருக்கிறது என்பது மற்றும் இக்கோயில் பற்றிய சில குறிப்புகள் குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் உள்ளது மணியனூர். சாதாரணமாக எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ அல்லது நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்க்க முடியும்.ஆனால் இங்குள்ள மாசாணியம்மன் மட்டும் 20 அடி நீளத்திற்கு மேல் சயண நிலையில் காட்சியளிக்கிறார். இந்த அம்மன் இடுகாடு பகுதியில் உள்ளதால் மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. நெற்றியில் பெரிய பொட்டுடன், மஞ்சள் தூவி பார்ப்பவர்களை அச்சம் கொள்ளும் அளவு தோற்றத்தில் அம்மன் காட்சி தருகிறார்.
இங்கு பில்லி சூனியம் மாதவிடாய் கோளாறு, பேய், பிசாசு பிடித்திருப்பவர்கள் ஒருமுறை மாசாணியம்மன் கோயில் சென்று வணங்கிவிட்டு வந்தால் அத்தனை பீடைகளும் நோய்களும் துன்பங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர். மேலும் குழந்தை இல்லாதவர்கள், நீண்ட காலமாக தவம் இருந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாமல் இருப்பவர்கள் திருவிழாவின் போது இங்கு தரும்
ரத்தசோற்றை உண்டால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்கள். இக்கோயில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்வாக பாரி வேட்டை ஆடுதல், அம்பு எய்தல், மயான கொள்ளை போன்ற நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெறும்.
தொடர்ந்து கோயிலைச் சேர்ந்த பம்பைக்காரர் சுப்பிரமணியரிடம் கேட்டபோது, "கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயிலில் உள்ளேன். இந்த மாசாணி அம்மன் கோவில் சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மாசாணி அம்மன் மிகவும் சக்திவாய்ந்தது என்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வேண்டுதல் வைத்துச் செல்வார்கள். இங்குள்ள அங்காளம்மன் சுயம்பு வடிவத்திலும், மயானத்தில் மாசாணி அம்மனாகவும் இருக்கிறார்கள்.
இடுகாட்டில் மாசாணி அம்மன்:
பொதுவாக மாசாணி அம்மன் என்றால் இடுகாடு பகுதியில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் ஏன் இங்கு உள்ளது என்று பலபேர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. இடுகாட்டில் இருப்பதற்கு காரணம் சிவன் அங்கே இருப்பதாலும், அம்மன் ஆக்ரோஷ நிலையில் இருப்பதாலும் இடுகாடு பகுதியில் அமைந்துள்ளது.
சிவனிடம் சண்டையிட்டு யார் சக்தி வாய்ந்தவர் என்று போட்டி ஏற்பட்ட நிலையில் அம்மன் கோபத்துடன் இடுகாடு பகுதியில் மிகவும் ஆக்ரோஷத்துடன் வந்துள்ளார். இதன்பின்னர் சிவன், என்னை பார்க்க வேண்டும் என்றால் சிவராத்திரி அன்றே பார்க்க வேண்டும் என்று படுத்த நிலையில் காட்சியளிக்கிறார். இதனால் தான் திருவிழா அன்று பாரி வேட்டை என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும், மாசாணி அம்மன் உருவம் வெறும் மண் மட்டுமே கொண்டு பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. எவ்வளவு மழை, வெயில் அடித்தாலும் அந்த உருவம் அப்படியே தான் இருக்கும். தாயனூர், மலையனூருக்கு அடுத்துபடியாக மணியனூர் மாசாணி அம்மன் கோயில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் இங்கு வருகை புரிவார்கள் என்று தெரிவித்தார்.