

நான்கு வருடங்களுக்கு முன் சமந்தா லீ, இப்படியொரு வெளிச்சம் தன் மீது பாயும் என்று நினைத்திருக்கவே மாட்டார். அதுவும் இதுபோன்ற கலைத் திறன் தனக்குள் இருக்கும் என்பது தெரியாமலேயே சராசரி பெண்ணாகவே கடந்திருப்பார்.


தாய்மையை அடைந்த பின்புதான் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்பார்க். இன்று இன்ஸ்டாகிராம் புகழ் என்ற பெருமையைக் கொண்ட பெண்ணாக 3,12,000 -க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார்.


ஆம்... மலேசியாவைச் சேர்ந்த சமந்தா லீ அடங்காமல் அட்டகாசம் செய்யும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எதை ஊட்டினாலும் உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள்.


என்ன செய்வது குழந்தையில் அளிக்கப்படும் ஊட்டச்சத்துதானே அவர்களின் எதிர்கால உடல் வலிமைக்கு விதை. அதற்காக பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார்.


நம் வீடுகளில் குழந்தை சாப்பிட வேண்டும் எனில் காரம் , இனிப்பு என சுவையைக் குறைத்து கூட்டுவார்கள்.


ஆனால் சமந்தாவோ அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை உணவில் அலங்கரித்து பரிமாறியிருக்கிறார்.


தன் கலையை அப்படியே மெருகேற்றிய சமந்தா அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது.


உணவிலேயே பூனை, எலி, ஸ்பைடர் மேன், மிக்கி மவுஸ் அவ்வபோது சின்ன சின்ன கதைகள் என ஒரு தட்டில் இத்தனை வித்தைகளை காட்டுகிறார் சமந்தா.


ஒரு முறை குழந்தைக்கு மைக்கேல் ஜாக்சனை மிகவும் பிடிக்கும் என்பதால் இட்லி , கோஸ், பிரெட் துண்டுகளை வைத்து மைக்கேல் ஜாக்சன் உருவத்தை அலங்கரித்துள்ளார்.


இத்தனைக்கும் இப்படி அலங்கரிக்க பெரிதாக மெனக்கெடுவதுமில்லை. இதற்காகப் பயிற்சி வகுப்புகளும் சென்றதில்லை.


இருப்பினும் அது அத்தனை பிரமாண்டமாகத் தெரிகிறதெனில் அவர் சமையல் மீது வைத்துள்ள அளவு கடந்த பற்றுதான் காரணம்.