உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அழகர் மலையில் இருந்து வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் நேற்று எதிர்சேவை நடைபெற்றது. இரவு விடிய விடிய கள்ளழகர் வரும் வழி நெடுகிலும் அழகர் மற்றும் கருப்பணசாமி வேடத்தில் ஆடியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
அதன்பின் திருக்கண்களால் அருள்பாலித்தபடியே ஆழ்வார்புரம் வைகை ஆற்றை நோக்கி சென்றார். கள்ளழகரை வரவேற்பதற்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.15 மணிக்கு மண்டகப்படியில் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். அப்போது, ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். மண்டகப்படியில் இருந்து ஆற்று முகத்துவாரத்திற்கு கள்ளழகர் வந்ததும் வீரராகவப் பெருமாள் மூன்று முறை முன்னும் பின்னும் சென்று அவரை வரவேற்றார்.
மேலும் வைகைக் கறையில் கூடியிருந்த பக்தர்கள் சூடம் ஏற்றியும் அழகரை வழிபட்டனர்.தொடர்ந்து வீரராகவப் பெருமாள் வீற்றிருந்த மண்டகப்படியை மூன்று முறை கள்ளழகர் வலம் வந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர், மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.