மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டு நாய்கள் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற 37 வயது பொறியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் 100க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். சிறுவயது முதலே தனக்கு நாட்டு நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். நாட்டு நாய்கள் குறித்தும் அதன் வளர்ப்பு குறித்தும் இவர் கூறும் விவரங்களை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றி வரும் அருள் - பத்மாவதி தம்பதியினரின் இளைய மகன் சதீஷ்குமார். இவர் இன்ஜினியரிங் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனாவுக்கு பின்னர் சென்னை செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், பொறியாளராக வேலை பார்க்கும் சதீஷ், நாய்கள் வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பதை விட பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். நாய்கள் வளர்ப்பிற்கு போத்தம்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் நாய்களுக்கான பராமரிப்பு கூடம் அமைத்து நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார்.
தமிழகத்தின் பாரம்பரிய நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து வகை நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். நாய்களுக்கு என்று தனி பண்ணை அமைத்துள்ளார். விலாசம் தெரியாதவர்கள் கூட சுற்றுவட்டார பகுதிகளில் நாய் பண்ணை தொடர்பாக விசாரித்தால் உடனடியாக அடையாளம் தெரியும் அளவிற்கு இப்பகுதியில் சதீஷ்குமார் புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனியாக அறை அமைத்து அவைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து வளர்த்து வருகிறார். சிப்பிப்பாறை நாய் இனத்தை பாதுகாத்து வளர்த்து வரும் சதீஷ்குமாருக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்கான நாட்டு இன காப்பாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சதீஷ்குமார், நாய்கள் வளர்ப்பில் சிறு வயது முதலே தனக்கு அதீத ஆர்வம் இருந்ததாகவும் அதனை கண்ட தனது தந்தை ராஜபாளையம் நாய் வாங்கி கொடுத்ததாகவும் அது தொலைந்ததால் அதனை தேடி அலைந்து கண்டுபிடித்து வீட்டிற்கு வந்தபோது நாய்கள் வளர்ப்பில் மேலும் ஆர்வம் அதிகரித்ததால் பல்வேறு நாய்களை வளர்த்து வந்ததாக தெரிவித்தார். கல்லூரி படிப்பு முடித்தவுடன் நாட்டு நாய்கள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டு ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய்களை வாங்கி வளர்த்து வந்ததாக கூறினார். மேலும், 20 சென்ட் நிலத்தில் நாய்களை வளர்த்து வந்த சதீஷ்குமார் நாய்கள் பராமரிப்புக்காக அதிக இடம் தேவைப்பட்டதால் ஊரில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை நாய்கள் வளர்ப்புக்காக தனது குடும்பத்தார் ஒதுக்கி கொடுத்ததாகவும் தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு நாய்கள் வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் வளர்க்கும் அனைத்து நாய்களுமே தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டு நாய்கள் எனவும் இந்த நாய் இனங்களை தென் தமிழகத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்திருப்பதாகவும் வட தமிழகத்தில் இந்த நாயினங்களை பற்றி தெரியாத ஒரு நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த நாய்களை தனித்தனி அரை அமைத்து முறையாக பராமரித்து வருவதாகவும் தெரிவித்த சதீஷ்குமார், நாய்களை வளர்ப்பதற்கு மாதத்திற்கு 50 ஆயிரம் வரை செலவாகும் எனவும் நாய்களுக்கான உணவு பெரிய நாய்களுக்கு காலை, இரவு என இரு வேளையும் குட்டி நாய்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கோழி மற்றும் மாட்டு இறைச்சி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். நாட்டு நாய் இனங்கள் வளர்ச்சியை அதிகரிக்க தான் வளர்த்து வரும் நாய்களை ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு விலைக்கு கொடுத்து வருவதாகவும் குறைந்த விலை ரூ.6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நாய்களை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார். நாட்டு இன நாய்களை வளர்த்து பாதுகாத்து வருவதால் தனக்கு தேசிய விருது கிடைத்துள்ளதாகவும் இந்த விருது தனக்கு புதிய உற்சாகத்தை கொடுப்பதாகவும் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.