நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை மலைக்கிராமம். இங்கு மேலூர், கீழூர், மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 1,224 வாக்குகள் உள்ளன. இந்த கிராம மக்கள் கரடுமுரடான பாதையில்தான் கீழே வரவேண்டும். பல ஆண்டுகளாக சாலைவசதி கேட்டும் இதுவரை சாலை ஏற்படுத்தப்படவில்லை. சாலை வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியிலுள்ள கீழூர் மற்றும் கெடமலையிலுள்ள 1,224 வாக்காளர்கள் உள்ள 2 வாக்குசாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர்தல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் கரடுமுரடான பாதையில் தலைச்சுமையாக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதமலைக்கு எடுத்துச்சென்றனர். இது கடந்த 50 ஆண்டுக்கும் மேலாகவே ஒவ்வொரு முறை தேர்தலின் போது இவ்வாறு தான் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி செல்லும் அவலநிலை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.