அனைவரும் ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், எவருக்குமே மன அமைதி என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. லட்சியம் என்ற பெயரில் ஒரு இடத்தில் நிற்காமல் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதும், அதற்காக நம்மிடம் இருக்கும் அமைதியை அழிப்பதுமே இன்றைக்கு ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது. நான் பிஸியாக இருக்கிறேன் என்று கூறுவது ஒரு பெருமைக்குரிய விஷயமாக இன்றைக்கு மாறிவிட்டது.
அப்படி உண்மையாகவே நாம் பிசியாக இல்லை என்றாலும், நமக்கு தேவையில்லாத வேறு ஏதேனும் வேலைகளை இழுத்து போட்டு செய்து கொண்டு பிஸியாக இருப்பதை போல் ஒரு பிம்பத்தை உருவாக்க முற்படுகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக இவைகளால் நமக்கு எந்தவித நன்மையும் உண்டாகவில்லை என்பதே உண்மை. அதற்கு பதிலாக அதிக அளவு மன கவலைகளும் மன அழுத்தமும் அதிகரித்து உடல் நலனும் மன நலனும் பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த பதிவை படிங்க
ஸ்லோ லிவிங் : ஸ்லோ லிவிங் அதாவது மெதுவான வாழ்க்கை முறை என்பது நமது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் எந்தவித அவசரமும் பதற்றமும் இல்லாமல் மிக உன்னிப்பாக, மெதுவாக திட்டமிட்டு வாழ்வது ஆகும். வேகமாக இருப்பது எப்போதுமே சிறந்ததாக இருக்காது. வேகமாக வாழ்ந்து மன அழுத்தத்துடன் வாழ்வதைவிட மெதுவான வாழ்க்கை முறையை பின்பற்றி அமைதியான மனநிலையோடு வாழ்வது சிறந்ததாகும். எவ்வாறு இந்த மெதுவான வாழ்க்கை முறையை பின்பற்றுவது என்பதை பற்றிய சில வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
கவனமாக இருக்க பயிற்சி செய்வது : எப்போதுமே தன்னைப் பற்றி ஒரு முழு கவனத்துடன் இருக்க வேண்டும். வாழ்வில் நிகழும் சம்பவங்கள் மற்றும் அதற்கு நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் என அனைத்தையும் கவனிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி தியானம் போன்றவை உதவக் கூடும். இதை சரியாக கற்றுக் கொண்டாலே நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது மனநிலையிலும் வாழ்க்கை முறைகளும் நல்லவிதமான மாற்றங்கள் உண்டாகக்கூடும்.
குற்ற உணர்விலிருந்து வெளிவருதல் : நமது கடந்த கால நிகழ்ச்சிகளால் உண்டாகும் குற்ற உணர்ச்சிகளில் இருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டும். இதை சரியாக செய்தாலே உங்களது கற்பனை திறனும் செயல் திறனும் அதிகரிப்பதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். மேலும் உங்களால் நிம்மதியான மன அமைதி உடன் ஒரு வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் முடியும்.