குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கிறோம். பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். பெரியவர்களும் கூட, சத்தான உணவுகள் தவிர்த்து, இதயத்தை பராமரிப்பது, நுரையீரலை வலுப்படுத்துவது, உள்ளிட்ட உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளையும் பராமரித்து வருகிறோம். ஆனால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளின் பார்வையை, அதாவது கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வளவாக கவனிப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது கண்கள் பராமரிப்பு மிகவும் அவசியமாகி இருக்கிறது.
கைகளில் மொபைல், கண்கள் முன்னே கணினி, நவீன தொலைக்காட்சி என்று உலகம் என்று சுருங்கியுள்ள நிலையில், ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை சாதனங்களில் செலவழிக்கிறோம். கொரோனோ லாக்டவுன் காரணமாக எல்லா வயதினருமே மொபைல் போன்களை பயன்படுத்தும் நேரம் அதிகரித்து விட்டது. இது குழந்தைகளுக்கும் பொருந்தும். அதிகப்படியான ஸ்க்ரீன் டைம் காரணமாக குழந்தைகளின் பார்வையும் பாதிக்கும் சாத்தியம் உள்ளது. இளம் வயதிலேயே பார்வைக் குறைபாடு ஏற்படுவது. வளரும் போது கண்கள் சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தலாம். குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைலை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணித்து ஸ்கிரீன் டைமை கட்டாயமாக குறைக்க வேண்டும்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் இருப்பது போலவே, கண்களை, பார்வையை வலுப்படுத்தவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குறிப்பிட்ட உணவுகள் உள்ளன. மேலே குறிப்பிட்டது போல, உடல் நலம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கண்களின் பாதுகாப்பும் முக்கியம். உங்கள் குழந்தை சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்: உணவில் தினமும் பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும், அதிகமான கீரைகளை சாப்பிடவேண்டும் என்பதை நாம் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கண்பார்வைக்கு மிகவும் முக்கியமானவை. தினமும் உணவில் ஒரே ஒரு கீரை வகை அல்லது ஒரு பச்சை காய்கறிகள் சாப்பிட வேண்டும். பாலக் கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கேரட்: பீட்டா கரோட்டின் எனப்படும் காம்பவுண்டை அபரிமிதமாக கொண்டுள்ள கேரட்டுகள் உடலுக்கு தேவையான வைட்டமின் A சத்தை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்கின்றன வைட்டமின் A சத்து பார்வைக்கு மிக மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் ஆரோக்கியமான கண்களுக்கு கேரட் தினமும் சாப்பிடலாம்.
முட்டை: பல விதமாக சமைத்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் முட்டை. உங்கள் குழந்தை விரும்பும் விதத்தில் நீங்கள் முட்டையை சமைத்து கொடுத்து அவர்களுக்கு புரதச்சத்து கிடைப்பதோடு மட்டுமல்லாமல், பல உணவுகளில் இல்லாத ஆனால் பார்வையை பலப்படுத்தக்கூடிய சத்துக்கள் முட்டையில் கிடைக்கும். முட்டையில் விட்டமின் A மட்டுமன்றி லுயூட்டீன், ஜியாசான்தின் மற்றும் ஜிங்க் ஆகிய கண் பார்வையை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள்.
சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமன்றி கண்களில் இருக்கும் நுண்ணிய இரத்தக் குழாய்களையும் வலுப்படுத்துகிறது. எனவே தினமும் இவற்றை உங்கள் குழந்தைக்களுக்கு கொடுக்கலாம்.