தமிழில் ஒரு தரமான சரித்திரப் படம் என்ற எண்ணம் தோன்றியதை மணிரத்னம், பி.சி.ஸ்ரீராமுடன் கமல் விவாதித்திருக்கிறார். பிறகு அவரே பொன்னியின் செல்வனை பரிந்துரைத்துள்ளார். படத்துக்காக தொல்லியல்துறை சார்ந்தவர்களுடன் உரையாடவும் செய்துள்ளார். நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும். அவற்றை தவறவிடக் கூடாது, அதேநேரம் திருவிழா கூட்டமாகவும் படம் ஆகிவிடக்கூடாது என்று அதையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராமுடன் விவாதித்துள்ளார்.
அன்று போல் அனைத்துக் காட்சிகளையும் அரங்கு அமைத்து எடுக்க கமலுக்கு உடன்பாடில்லை. கதை எங்கு நடப்பதாக சொல்லப்படுகிறதோ, அந்தப் பகுதிகளுக்கேச் சென்று, தேவைப்பட்டால் அரங்கு அமைப்பது என்று முடிவு செய்துள்ளார். நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களுக்கு புதுமுக நடிகைகளை நடிக்க வைப்பது கமலின் தீர்மானமாக இருந்தது. தெரிந்த நடிகை என்றால் அவர்களின் இமேறா அந்த கதாபாத்திரத்தில் படியும், அது நல்லதில்லை என்பது அவரது கருத்து. அதேநேரம் ஆண் கதாபாத்திரங்களில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடம் பேசி அவர்களின் சம்மதத்தைப் பெற்றிருந்தார். இசை, வேறு யார் இளையராஜாதான்.
வந்தியத்தேவனாக கமல் நடிப்பதும் உறுதியாகியிருந்தது. மணிரத்னமே பொன்னியின் செல்வனை இயக்க சரியான ஆள் என்பதிலும் கமல் தீர்க்கமாக இருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் ஜரூராக நடந்தது. முழு ஸ்கிரிப்ட் தயாரானதும் அதனை பொன்னியின் செல்வனின் தீவிர வாசகர்கள் சிலரிடம் வாசிக்கத் தந்து கருத்து கேட்க கமல் தீர்மானித்திருந்தார். ஆனால், அது போல் எதுவும் நடக்கவில்லை. படமும் டேக்ஆஃப் ஆகவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது பட்ஜெட்.