வாள் சண்டை, குதிரையேற்றம் என்றால் அந்தக்கால ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருகிறவர் எம்ஜி ராமச்சந்திரன். சிவாஜி ஒருபுறம் கதையம்சப் படங்களில் திருடனாக, அப்பராக, அப்பாவியாக, மாற்றுத் திறனாளியாக நடித்துக் கொண்டிருக்க, ஆக்ஷன் அடிதடி படங்களில் காதல், சென்டிமெண்ட் கலந்து கமர்ஷியல் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். அவரது ஆக்ஷன் இமேஜ் முதலமைச்சர் நாற்காலிவரை அவரை கொண்டு சேர்த்தது.
சென்னை மைலாப்பூருக்கு குடியெர்ந்த ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் ரஞ்சனுடையது. மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படிக்கையில் நிறைய நாடகங்களில் நடித்தார். அப்போதெல்லாம் பெரும்பாலும் நாடகத்திலிருந்துதான் சினிமாவில் நடிப்பதற்கு ஆள்களைத் தேர்வு செய்வார்கள். ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்த வேப்பத்தூர் கிட்டு சிபாரிசு செய்ய, தியாகராஜ பாகவதரின் ப்ளாக்பஸ்டர் படமான அசோக்குமாரில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது.
அதே வருடம் ரிஸ்ய சிருங்கர் திரைப்படத்தில் ரிஸ்ய சிருங்கராக நடித்தார். 1945 இல் வெளியான சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் ஹீரோவாகவும், எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்தனர். எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா படத்தில் வில்லனாக நடித்து, இந்தியிலும் புகழ்பெற்றார். 1951 முதல் அறுபதுகளின் இறுதிவரை இந்தியில் நடித்தார். இந்திப் படங்களில் அவர் கவனம் செலுத்தியதால் தமிழில் யாருக்கும் தெரியாத நடிகராக மறைந்து போனார்.
இந்தியில் அவர் பிஸியாக இருந்த போது எம்ஜிஆர் தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்தார். சாண்டோ சின்னப்ப தேவரின் தாய்க்குப் பின் தாரம் படத்தில் நடித்த எம்ஜிஆருக்கும் தேவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, அந்த நேரத்தில் காலில் அடிபட்டு ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஞ்சனிம் கால்ஷீட் வாங்கி நீலமலைத்திருடன் படத்தை தேவர் எடுத்தார். இந்திக்குச் சென்ற ரஞ்சனின் கம்பேக் படமாக அது அமைந்தது.
அதனைத் தொடர்ந்து 1959 இல் ராஜ மலைய சிம்மன் படத்தில் நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. அரசகாலத்து கதையில் ரஞ்சன் வீரம் செரிந்த இளைஞனாகவும், அவரது தங்கையாக சௌகார் ஜானகியும் நடித்தனர். தனது தங்கையிடம் தவறாக நடந்து கொள்ளும் படைத்தளபதி புலிக்கேசியை ரஞ்சன் துவைத்து எடுக்க, அவர் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பொய்யாக சுமத்தப்படும்.
அதனை முறியடித்து தனது காதலியான இளவரசி ராஜசுலோச்சனாவை எப்படி அடைகிறார் என்பது கதை. குதிரையேற்றம், வாள் சண்டை, கட்டடத்துக்கு கட்டடம் தாவுவது என்று படம் நெடுக ஆக்ஷன் ப்ரியர்களுக்கு தீனி போட்டது படம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியின் பாடல்களும், இசையும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றன.