இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிவருகிறது. சொந்த வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை என எங்கு சென்றாலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இந்நிலையில் தான் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திறக்காக இந்திய அரசியலமைப்பு பல தனித்துவமான உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக ஐபிசி, சிஆர்பிசி மற்றும் எவிடன்ஸ் சட்டம் அனைத்தும் பெண்களின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005; ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டம், 1956; வரதட்சணை தடைச் சட்டம், 1961; பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம், 1986; பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013; மற்றும் இந்து திருமணச் சட்டம் ஆகியவை துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிரான பெண்களின் உரிமைகளைத் திறம்பட செயல்படுத்துவதற்கான பல சட்டங்கள் உள்ள நிலையில், மகளிர் தின விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் இதுக்குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம். இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்..
பராமரிப்பு உரிமை : இன்றைக்கு பல பெண்கள், கணவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் திருமண உறவை முறித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு விவாகரத்துக்குப் பிறகு பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்போடு இருப்பதாக அவர்களுக்கு ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கூடிய சட்டங்கள் இந்திய அரசியலமைப்பில் உள்ளது. அதாவது விவாகரத்திற்குப் பிறகும், திருமணமான பெண் மறுமணம் செய்யாத வரையில், அவளுடைய கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. இது மனைவியின் வாழ்க்கை முறை, கணவனின் பொருளாதார நிலை மற்றும் சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
கண்ணியத்திற்கான உரிமை : 1955 ன் இந்து திருமண சட்டம் பெண்களுக்கு பல பாதுகாப்புகளை வழங்குகிறது. பெண்ணுக்கு மிரட்டல், நிர்ப்பந்தம்செய்து சில செயல்களைச் செய்ய வைத்தல், வன்முறை போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது, இது பெண்களின் கண்ணியத்தைக் குலைப்பதாகவே கருதப்படுகிறது. எனவே பிரிவு 354, 354 டி ன் படி இதுப்போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை : பெண்கள் மீதான குடும்ப வன்முறை என்பது ஒவ்வொரு நாளும் பல விதமாக அரங்கேறுகிறது. இவர்களைப் பாதுகாக்கும் வகையில் தான் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 உருவானது. குடும்ப வன்முறையானது உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல், பாலியல் மற்றும் நிதி ரீதியான துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியது. .இவற்றால் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாக நேர்ந்தால் இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்ய, மகளிர் உதவி எண்ணை (800) 1091க்கு அழைக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் உங்கள் நிலைமையைப் பற்றி காவல்துறைக்குத் தெரியப்படுத்துவார்கள். ஒருவேளை குற்றம் அடையாளம் காணக்கூடியதாக இருந்தால், போலீசார் உடனடியாக எப்.ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பணியிடத்தில் பெண்களின் உரிமைகள் : நீங்கள் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான கழிவறைக்கு உங்களுக்கு உரிமை உண்டு. 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களைக் கொண்ட பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு மற்றும் உணவுக்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றமும், அரசும் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013, 2013 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. எனவே, உங்கள் வேலை செய்யும் இடத்தில் யாராவது உங்களது பாலியல் தொல்லைக் கொடுத்தால், அல்லது பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து உங்களிடம் பேசினாலே அவர்கள் மீது நீங்கள் புகார் அளிக்கலாம். IPC 354A பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.
வரதட்சணைக்கு எதிரான உரிமை : 1961 ஆம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டம் மணமக்கள், மணமகன்கள் அல்லது அவர்களது பெற்றோர் திருமணத்தின் போது, அதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு வரதட்சணைக் கொடுப்பது அல்லது ஏற்றுக்கொள்வதை சட்டவிரோதமாக்குகிறது. சட்டத்தின் படி ஒரு தரப்பினரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கப்பட்ட அல்லது ஒப்புக்கொள்ளப்பட்டாலும் குற்றமாகிறது. நீங்கள் வரதட்சணை கொடுத்தாலோ? வேறு ஒருவருக்கு கொடுத்தாலோ? அல்லது வாங்க உதவி செய்தாலோ? உங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படும்.
தனியார் பாதுகாப்பு உரிமை : இது தற்காப்பு உரிமையாக கருதப்படுகிறது. தாக்குபவர்களிடமிருந்து உங்கள் உடலையோ அல்லது மற்றொரு நபரின் உடலை பாதுகாக்கும் போது, கடுமையான தாக்கப்பட்டும மரணம் ஏற்பட்டால் ,எந்த சூழ்நிலை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை. குறிப்பாக உங்களைத் தாக்குபவர் உங்களைக் கொல்லப் போகிறார்,கடுமையாகக் காயப்படுத்துவார், கற்பழிக்கப் போகிறார், அறையில் அடைத்துவிடுவார், அல்லது ஆசிட் வீசப் போகிறார் என்று நீங்கள் நம்பினால், அவர்களைக் கொல்வதற்குக் கூட உங்களுக்கு உரிமை உண்டு. இதனால் நீங்கள் கொலையாளியாக மாற முடியாது. சட்டம் நிச்சயம் உங்களைப் பாதுகாக்கும்.