பொதுவாக ஒரு பெண்ணின் மனதை ஆண்களைக் காட்டிலும் மற்றொரு பெண் தான் புரிந்து கொள்ள இயலும். பணி ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பிரச்சினைகள் குறித்து இன்னொரு பெண் தான் புரிந்து கொள்ள இயலும். ஆனால்,யதார்த்தம் என்னவென்றால் ஆண் மேலதிகாரியாக இருக்குமிடத்தில் வேலை ரீதியாக பெண் ஊழியர்களுக்கு கிடைக்கும் சௌகரியம் என்பது சக பெண் மேல் அதிகாரியாக இருக்கும் போது கிடைப்பதில்லை.
என் மீதே எரிச்சலை காட்டுவார்கள் : மேல் அதிகாரியாக பெண் பணியாற்றும் அலுவலகம் ஒன்றில் பல ஆண்களும், ஒருசில பெண்களும் பணியாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அந்த மேல் அதிகாரி தனக்கு ஏற்படுகின்ற ஒட்டுமொத்த வெறுப்புகளையும் பெண் ஊழியர்கள் மீதே காட்டுவார்களாம். சக ஊழியர்களை ஒப்பிடுகையில் பெண் ஊழியர்களிடம் அதிகப்படியான பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகிறதாம்.
ஆடை, அலங்காரம் கவனிக்கப்படுகிறது : சாதாரண உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரமின்றி பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் எவ்வளவுதான் தங்கள் திறமையை காட்டி வேலை செய்தாலும், பெண் உயர் அதிகாரிகளுக்கு அது பிடிப்பதில்லை என்கின்றனர். வேலையை மதிப்பீடு செய்யாமலேயே குறை சொல்லத் தொடங்கி விடுவார்களாம். அதுவே, நேர்த்தியான ஆடையுடன், முக அலங்காரத்துடன் செல்லும் சமயங்களில் வேலையில் தவறுகள் இருந்தாலும் உயர் அதிகாரி பாராட்டுகின்றனராம்.
பொறாமை உணர்வு : அலுவலகத்தில் நல்ல திறமையும், ஆற்றலும் கொண்ட பெண் ஊழியர்களை கண்டால் பெண் உயர் அதிகாரிக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தான் ஒரு உயர் அதிகாரி என்பதையும் மறந்து, சக ஊழியர்கள் மத்தியில் தொடர்புடைய பெண் ஊழியர் குறித்து பொய்யான விஷயங்களை சொல்லி தவறான பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்வார்களாம்.