நம் வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் கொண்டது. இதில் குதூகலத்தை தரக் கூடிய நடவடிக்கைகள் என்பது அதிகம் இருக்காது. ஆகவே, நமக்கு மன ஆறுதல் தருகின்ற ஏதோ ஒரு பொழுதுபோக்கு பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால், நிச்சயமாக அது நம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.
பொழுதுபோக்கு பழக்கம் என்றால் என்ன? அது உங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு திருப்திகரமான நிலையை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையை பூர்த்தி அடைந்ததாக மாற்ற வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு பணம் வருகிறதோ இல்லையோ, நிச்சயம் மன நிம்மதி கிடைப்பதாக இருக்க வேண்டும். சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எப்படியாகினும் இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
ஸ்ட்ரெஸ் குறையும் : நாம் எவ்வளவு கடினமாக உழைத்தும், அதற்குரிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்றால், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் உதவிகரமாக இருக்கும். இதுதான் ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும். அது டென்னிஸ் விளையாட்டாக இருக்கலாம் அல்லது புத்தம் வாசிப்பதாக இருக்கலாம் அல்லது பூங்காவில் நடைபயிற்சி செய்வதாக இருக்கலாம். எப்படியாகினும் மன பாரம் குறைய வேண்டும்.
நம்பிக்கை அதிகரிக்கும் : புத்தகம் வாசிப்பது அல்லது எதையேனும் எழுதுவது அல்லது இசைக்கருவியை இசைப்பது என எதுவானாலும் அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும். குறிப்பாக, நீங்கள் பொழுதுபோக்காக மேற்கொள்ளும் விஷயத்தில் நீங்கள் மிகுந்த திறன் கொண்டவராக மாறும் பட்சத்தில் அது உங்களுக்கு பக்கபலமாக அமையும்.