ஆண் , பெண் என்று இல்லாமல் பொருளாதார ரீதியான சுதந்திரம் என்பது அனைவருக்குமே தன்னம்பிக்கை தரக்கூடிய விஷயம். இருப்பினும் அந்த சுதந்திரம் அனைவருக்கும் அத்தனை எளிதாக கிட்டுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது சவாலான விஷயம்தான். அதுவும் இல்லதரசிகளாக இருக்கும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது எட்டாக்கனியாகவும் இருக்கும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியமில்லை. அதாவது வீட்டில் இருந்துகொண்டே எண்ணற்ற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் சுயமாக தனக்கு தேவையான விஷயங்களை வாங்க முடிகிறது. சேமிப்பு அவர்களுக்கு சில முடிவுகளை உறுதியாக எடுக்க உதவுகிறது. இதனால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் : உங்கள் மீது அதீத நம்பிக்கை அதிகரிக்கும். பொதுவாகவே நம் பர்சில் பத்து ரூபாய் இருந்தாலே போதும் நம்பிக்கையாக எதையும் செய்துவிடலாம் என்று தோன்றும். ஆனால் அதுவே நாம் சுயமாக சம்பாதித்து வைத்திருக்கும் பணம் எனில் கூடுதல் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மீதான தன்னம்பிக்கையானது உங்கள் தோற்றத்தையும் மேம்படுத்தும். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாகவும் இருப்பீர்கள்.
வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம் : கடந்த தலைமுறை வரை வீட்டில் அம்மாக்கள் குழந்தைகளை பார்ப்பது , சமைப்பது என இல்லத்தரசிகளாக மட்டுமே பார்த்து வளர்ந்ததால் என்னவோ இன்று திருமணம் ஆன பிறகும் பெண்கள் தடையின்றி வேலைக்கு செல்கின்றனர். அந்த தலைமுறையில் அம்மாக்கள் எது வேண்டுமென்றாலும் அப்பாவிடம்தான் காசுக்காக நிற்க வேண்டும். அதுவும் செலவு செய்த பணத்திற்கு சரியான கணக்கை கணவரிடம் சொல்ல வேண்டும். இதற்கு சம்பள போதாமையும் ஒரு காரணம் எனலாம். மிச்சம் பிடித்தல், சேமிப்பு என்பதெல்லாம் ஒருவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை.. கணவன் , மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் அவர்களுடைய வாழ்க்கை தரம் மேம்படுகிறது. பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் உயர்த்த முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்க இருவரின் வருமான உதவியாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு முன்னுதாரணம் : நீங்கள் குடும்பம், அலுவலகம் என இரண்டையும் சாமர்த்தியமாக சமாளித்து அவர்களை வளர்த்து வழிநடத்தும் போக்கு பிள்ளைகளுக்கு நீங்கள் ஊக்க சக்தியாக இருப்பீர்கள். அதுவும் பெண் குழந்தைகளாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் இருப்பீர்கள். இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வது, தன்னம்பிக்கை , தைரியம் என அனைத்தையும் உங்கள் மூலமே அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அது அவர்களை பெருமைப்படுத்தும்.
சுய அடையாளம் : சுய அடையாளம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் வேலை, தொழில் கிடையாது. நீங்கள் யார் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் அந்த வேலைதான். உங்களை நீங்களே அடையாளம் காணும் இடமும் அதுவாகத்தான் இருக்கும். எனவே உங்கள் கணவனுக்கு மனைவியாகவும், பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் மட்டுமல்லாமல் நீங்கள் இருக்கும் வேலையின் பொறுப்புதான் உங்களுக்கான அடையாளமாக இருக்க வேண்டும்.